பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருடனுக்கு விடுதலை!

379

"நான் ஒரு குற்றமும் செய்யலைங்களே!” என்றான் கன்னையா.

"நீ ஒரு குற்றமும் செய்யவில்லையல்லவா? அதுதான் குற்றம்; போய் வா;”

"ஏழை மேலே தயவு வையுங்க, அம்மா!"

"அது என் வேலையல்ல; கடவுளின் வேலை!"

"அவருதான் உங்களைவிட மோசமாயிருக்காருங்களே” அவ்வளவுதான்; சுஜாதா சட்டென்று திரும்பி, மிஸ்டர் ஹரன்! இவன் சொல்வதைக் கேட்டீர்களா. நான் ரொம்ப மோசமாம்!" என்று இரைந்தாள்.

கன்னையாவுக்கு தான் செய்து விட்ட தவறு இப்போது தான் புரிந்தது. நிலைமையைச் சமாளிப்பதற்காக, "உங்களைச் சொல்லலை, அம்மா....!" என்று அவன் ஏதோ சமாதானம் சொல்ல ஆரம்பித்தான்.

"போடா, ராஸ்கல்! இனிமேல் நீ இங்கே ஒரு நிமிஷங் கூட இருக்கக்கூடாது...கெட்அவுட்....ம், கெட் அவுட்......!"

கன்னையாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் திருதிரு வென்று விழித்தபடி, "எஜமான்" என்று மீண்டும் குரல் கொடுத்தான்.

அவர் உள்ளே இருந்தபடி, "அம்மா சொன்னால் சொன்னதுதான், போடா வெளியே!” என்று உறுமினார்.

கன்னையாவின் கண்களில் நீர் சுரந்துவிட்டது. இருவரும் கைவிட்ட பிறகு அவன் என்ன செய்வான்? "நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!” என்று எண்ணி, "சம்பளம்?" என்றான் அழாக் குறையாக.

"மிஸ்டர் ஹரன், இவனுக்குச் சம்பளத்தைக் கொடுத் தனுப்புங்கள்" என்றாள் சுஜாதா.

"அதைத்தான் உன்னிடம் கொடுத்திருந்தேனே" என்றார் ஹரன்.

"ஓ, அதுவா? அந்தப் பணத்துக்கு ஒரு பார்க்கர் பேனா வாங்கி என் 'ப்ரெண்'டுக்குக் கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுத்துவிட்டேன்; இப்போது என்னிடம் பணமில்லை. இதற்குத்தான் பாங்கில் போடும் பணத்தை என் பேரால் போடுங்கள், என் பேரால் போடுங்கள் என்று