பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



388

விந்தன் கதைகள்

சாத்தியமாகும்! ரகுவையும் ராதையையும் விட்டு விட்டு நாம் எப்படி ஊணுறக்க மின்றி உயிரை விடமுடியும்?

அப்புறம் அம்மா? நமக்குப்பின் அவள் கதி? அந்தப் புறாக்களுக்குத்தான் பாசமென்றும் பந்தமென்றும் ஒன்றும் இல்லை. கொஞ்சம் பறக்கும் சக்தி வந்ததும் அவை தங்கள் குஞ்சுகளை விரட்டி விடுகின்றன. நம்முடைய குழந்தைகளை நாம் அப்படி விரட்டிவிட முடியுமா?-ஐயோ, எப்படி முடியும்?

முடியா விட்டால் என்ன? இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொள்ளமலே நாம் வாழ முடியாதா?

ஏன் முடியாது?

அம்மாவுக்கோ வயதாகிவிட்டது; அவளால் எந்த காரியத்தையும் இனி கவனிக்க முடியாதுதான்-அதனால் என்ன, சமையலுக்குத்தான் சங்கரனை வைத்தாகி விட்டதே! பார்ப்போம்:

நாளடைவில் என்னையும் அறியாமல் ஏதோ ஒரு ஏக்கம்: ஏன் இப்படி?

இத்தனை நாளும் பார்ப்பதற்கு லட்சணமாயிருந்த சங்கரனை இப்போது பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் சமையலையும் சாதம் பரிமாறுவதையும் சகிக்கவே முடிவதில்லை.

"காப்பி கொண்டு வரட்டுமா?" "சாதம் போடட்டுமா?" என்று அவன் கேட்கும் போதெல்லாம் காதை அடைத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. வியர்க்க விறு விறுக்க அவன் எதிரில்வந்து நின்றால் என் உடம்பே பற்றி எரிவது போல் இருக்கிறது.

சாட்டை போல் தலைமயிரைப் பின்னிவிட்டுக் கொண்டு, தலை நிறையப் பூவை வைத்துக் கொண்டு, ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு கை வளைகள் கலகலவென்று சப்திக்க, அப்படியும் இப்படியுமாக அன்னநடை போட்டுக் கொண்டிருந்த அந்த அழகு தெய்வம் எங்கே, இந்த அவலட்சணம் எங்கே?

"காப்பியா? இதோ, கொண்டுவந்து விட்டேன்"

"சாதமா? இதோ, போட்டு விட்டேன்!" என்று அவள் குயிலைப்போலக் கொஞ்சுவது எங்கே? இவன் கழுதை போலக் கத்துவது எங்கே?

அவன் செய்யவேண்டியது வேலை; வாங்கவேண்டியது கூலி-இவற்றைத் தவிர அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?