பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

விந்தன் கதைகள்

காணப் போவதில்லை. நானும் காணப் போவதில்லை. பேசாமல் சொல்வதைக் கேள்-நாளைகாலை வண்டியில் லலிதாவருகிறாளாம்; அதிலும் தன்னந்தனியாக வருகிறாளாம்-என்ன மனக் கஷ்டத்துடன் வருகிறாளோ, என்னமோ!-இப்போது நாம்தான் அவளுக்குத் தாயும் தந்தையும் போல. நீ நினைப்பது போல் அவள் இங்கே எஜமானியாக வரவில்லை. விருந்தாளியாகத்தான் வருகிறாள். அவள் வந்து இங்கே ஒரு பத்து நாட்கள் இருந்து விட்டுப் போவதால் உனக்கோ, எனக்கோ, பிரமாதமான நஷ்டம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் அதற்காக மனிதத்தன்மையை நாம் இழந்து விடுவதா, என்ன? பணம் இன்று வரும், நாளைபோகும். பெற்று எடுத்த பாசமும் உடன் பிறந்து வளர்ந்த பாசமும் போனால் வராது. அவளுடைய துரதிருஷ்டமோ-இன்று இரவே நான் அவசியம் வெளியூருக்குப் போகவேண்டியிருக்கிறது. நாளைக் காலையில் நீயே மணியுடன் ஸ்டேஷனுக்குப் போய், அவளை முகம் கோணாமல் அழைத்து வா; வஞ்சனை இல்லாமல் அவளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்!”

"செய்வதை நீங்களே செய்து கொள்ளுங்கள்; நான் வேண்டாமென்று சொல்லவில்லை!"

"இதோ பார், சரசு! நீ இப்படிக் கரிக்கும்படியாக அவள் உனக்கு என்ன தீங்கு செய்தாள், என்னுடன் பிறந்ததைத் தவிர!-உன்னைப் பற்றி அவள் இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதைப் பார்த்தாயா? - கல்யாணத்திற்குப் பிறகு மன்னியை ஒரே முறைதான் பார்த்தேன். இன்னொரு முறை பார்க்கவேண்டுமென்று உன் உள்ளம் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது. மணியைப் பெற்றெடுத்த பிறகு அவளது உடல் நிலை எப்படியிருக்கிறது, அண்ணா.....?”

"இவ்வளவுதானே?-இன்னும் கொஞ்சம் நாட்களுக்கெல்லாம் போயே விடுவாள்; நீ வந்து இங்கயே, ‘ஹாய்'யாக இருக்கலாம் என்று எழுதுங்கள்!"

"சீசீ ஒரேயடியாய் நீ இப்படிக் கெட்டுவிட்டாயே?

"நான் ஒன்றும் கெட்டுப் போகவில்லை!"

"உன்னிடம் மட்டும் அல்ல; உன்னைப்போன்ற பெண்களிடமே என்னைப் போன்றவர்கள் நியாயத்தை எதிர் பார்ப்பது மடமைதான்.....!"

"அப்படிச் சொல்லுங்கள்: அதில் உங்கள் தங்கையும் சேர்ந்தவள்தானே?"