பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

விந்தன் கதைகள்

தெரிந்தாலும் அது குறையாகத் தோன்றவில்லை. அதற்குள் அலமேலு அம்மாள், தான் ஏற்கனவே சபதம் எடுத்துக் கொண்டிருந்தபடி கண்ணை மூடிவிட்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அதுதான் நடக்கவில்லை!

அவளுடைய வயது வளர்ந்து கொண்டே யிருந்தது; அதற்கேற்றாற்போல் வம்பும் வளர்ந்து கொண்டே வந்தது.

"பேபி, பேபி!"

இது 'வைஜயந்தி' என்பதற்குப் பதிலாக ஜானகிராமன் தன் மனைவிக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர். இந்தப் பெயரைச் சொல்லி அவன் தன் மனைவியை அன்புடன் அழைத்தால் போதும் - வந்தது மோசம்; "அது என்னடா, பேபி, பேபி!" நாய்குட்டியைக் கூப்பிடுகிற மாதிரி கூப்பிடுகிறாயே! என்பாள் அலமேலம்மாள்.

வைஜயந்தி பதிலுக்கு எதையாவது சொல்லி, வம்பை வளர்க்காமலிருக்க வேண்டுமே என்று கவலையுடன் ஜானகிராமன் தன் மனைவியின் முகத்தைப் பார்ப்பான். அவளோ தன் உதட்டின் மேல் ஆள் காட்டி விரலை வைத்து "உஸ்...தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை" என்று சொல்லி விட்டுச் சிரிப்பாள்.

சாயந்திரவேளையில் வைஜயந்தி தன்னை அலங்கரித்துக் கொண்டால் அலமேலு அம்மாவுக்கு ஏனோ பிடிக்கவே பிடிக்காது. "அகமுடையானின் மனதைக் கெடுப்பதற்கு இதெல்லாம் என்ன வேஷம்?" என்று கேட்டு, அவள் முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொள்வாள்.

"இது என்ன அபத்தம்! கண்டால் காத தூரத்தில் நிற்கும்படி அவள் இருக்கவேண்டுமா, என்ன?" என்று தனக்குள் வருந்தியவனாய், ஜானகிராமன் தன் மனைவியைப் பார்ப்பான்.

அவள், "தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!" என்று சொல்லிவிட்டுச் சிரிப்பாள்.

இரவிலும் இந்த வம்பு நிற்பதில்லை. படுக்கையறையில் இருக்கும் கணவனுக்கு மனைவி பால் கொண்டு போனால், "வெய்யிற்காலத்தில் கூட இருவருக்கும் உள்ளே என்ன படுக்கை?” வெளியே சற்றுக் காற்றாடப் படுத்துக் கொள்ளக்கூடாதோ?" என்று அவள் எதையோ நினைத்துக் கொண்டு இரைவாள்.