பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பும் அருளும்

407

என்ன பயங்கரமான சேதி!

எங்கள் கடையில் தீப்பிடித்துக்கொண்டு விட்டதாம்! அவ்வளவுதான்; அடுத்த கணம் நானும் அக்கினி பகவானால் ஆட்கொள்ளப்பட்டுத் 'திருதிரு'வென்று எரிவதுபோல், எனக்குத் தோன்றியது.

அப்பாவிடம் சேதி சொல்வதற்காக விரைந்தேன். கண்ணில் பட்ட ஒவ்வொரு பொருளும் தீப்பற்றி எரிவது போல எனக்குத் தோன்றின!

பரபரப்புடன் அவருடைய அறைக்குள் நுழைந்தேன். அவரும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார்!

"அப்பா! அப்பா!! அப்பா!!!"

“என்னடா அது?"

"கடையில் தீப்பிடித்துக்கொண்டு விட்டதாம்!”

"ஐயோ, கையிருப்பு ரொக்கம் கூடக் கடையில்தானே வைத்திருந்தேன்!” என்று சொல்லிக்கொண்டே, அவர் எழுந்து வெளியே ஓடினார்.

வாயிற்படியில் பாவி எமன் காத்துக் கொண்டிருந்தான் போலும்-தடுக்கி விழுந்த அப்பாதடுக்கி விழுந்தவர்தான்; மறுபடியும் எழுந்திருக்கவேயில்லை!

அடுத்தாற்போல் அவரைத் தொடர்ந்து சென்று நானும் உணர்விழந்து கீழே விழுந்தேன். அந்த நிலையில் எவ்வளவு நேரம் இருந்தேனோ. தெரியாது. மீண்டும் உணர்வு பெற்றபோது என் அன்னை, அழுது, அழுது ஓயும் தருவாயில் இருந்தாள்.

அவளுடைய வெளுத்த முகத்தையும், கண்ணிர் பெருகிய கண்களையும், என்னால் சகிக்க முடியவில்லை. மெல்ல எழுந்து கடையின் பக்கம் சென்றேன்.

கருத்த சாம்பல் என் கண்களுக்குக் காட்சியளித்தது. யாரோ கொடுத்த தகவலின்பேரில் தீயணைக்கும் படையினர் வழக்கம்போல் தீயணைந்த பிறகு வந்து திரும்பிச் சென்றனராம்!

எந்த விஷயத்திலும் பிறரை நம்பாத என் அப்பா எங்கள் கடையை ஒரு காலணாவுக்குக் கூட 'இன்ஷ்யூர்'செய்து வைக்கவில்லை. அவருக்குப் பிறகு எனக்கும் என் அன்னைக்கும்