பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

விந்தன் கதைகள்

ஜீவாதாரமாக இருந்தது நாங்கள் குடியிருந்த வீடும், அந்த வீட்டின் பெறுமானமுள்ள கடனுந்தான்!

ஒரு பக்கம் கவலையே உருவான தாய்; இன்னொரு பக்கம் கரைகாணாத சம்சார சாகரம்; மற்றொரு பக்கம் கடன்காரர்கள்-இவற்றுக்கு முன்னால் என் கலாசாலை வாழ்க்கையின் கதி என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவா வேண்டும்?

கதை கவிதையிலும், நடனம் நாடகத்திலும், சினிமா சங்கீதத்திலும் சென்றுகொண்டிருந்த என் மனம், அரிசி பருப்பிலும், உப்பு புளியிலும், காய் கறியிலும் செல்ல ஆரம்பித்தது.

பணக் கவலை என்னைப் படுத்திய பாடோ கொஞ்சநஞ்சமல்ல. நான் பார்த்து வந்த வேலைக்காகப் பாங்கிக்காரர்கள் கொடுத்த மாதச் சம்பளம் அறுபது ரூபாய் போதவில்லை. வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதென்று தீர்மானித்தேன். அன்றே 'வீடு வாடகைக்கு விடப்படும்' என்று ஒர் அட்டையில் எழுதி வாயிற்படியில் தொங்கவிட்டேன்.

காலை எழுந்தவுடன் வேலை; மாலை முடிந்தவுடன் தூக்கம்; மற்ற நேரங்களில் அன்னவிசாரம்; நடுநடுவே என் மனோவானத்தில் ரத்னாவின் வதன மின்னல்-ஆம், ராணி மின்னாத அந்த வானத்திலே ரத்னா அடிக்கடி மின்னிக் கொண்டிருந்தாள்!

இந்த நிலையிலே சதிசெய்யும் விதிக்கு என்மேல் என்ன கருணையோ தெரியவில்லை. எங்கேயோ இருந்த ரத்னாவை அது எங்கள் வீட்டில் கொண்டுவந்து சேர்த்தது-ஆம், எங்கள் வீட்டில் ஒரு பகுதியை அவர்கள்தான் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள்.

இடையே கழிந்த ஒரிரு வருடங்களில் எங்களுக்குள் ஏற்பட்டிருந்த மாறுதல் ஒன்றே ஒன்றுதான்-அதாவது அவளைச் சந்தித்த பிறகு, நான் தந்தையை இழந்துவிட்டிருந்தேன். அவள்தாயை இழந்து விட்டிருந்தாள்.

ஒரு நாள் ஏதோ பேச்சுவாக்கில் ரத்னாவின் தகப்பனாரை நோக்கி, "நீங்கள் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்துகொள்ள வில்லையா?"என்று கேட்டாள் என் தாயார்.

அவர் சிரித்துக்கொண்டே "இப்போது ரத்னாவுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன்!" என்றார். அவளுக்குக் கல்யாணமான பிறகு, நீலிக்கும் ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்துக் கல்யாணம்