பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பும் அருளும்

413

எதிரே வைத்தாள். சந்தேகக் கண்களுடன் நான் அதை வெறித்துப் பார்த்தேன்; "சாயங்காலம் வந்ததும் காப்பி சாப்பிடுவது வழக்கமாச்சே என்று நான்தான் ரத்னாவைக் கூப்பிட்டுக் கொஞ்சம் காப்பி போடச்சொன்னேன்!” என்று அம்மா என் சந்தேகத்தை தீர்த்து வைத்தாள்.

"சரி, உடம்பு எப்படியிருக்கிறது?" என்றேன் நான், என்னை நானே ஏமாற்றிக் கொள்வதற்காக!

"உடம்புக்கு ஒன்றுமில்லை; நீ சாப்பிடு!" என்றாள்.அவள்.

அத்தனை நாளும் இல்லாத உவகையுடன் அந்தக் காபியை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, "நாளையிலிருந்து ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு விட்டேன், அம்மா!" என்றேன் நான்.

"என்னத்துக்காக?”

"எத்தனை நாளைக்குத்தான் பேசாமலிருப்பது? உன்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு டோக வேண்டாமா?”

"அதற்கா ஒரு வாரம்?"

"நாளுக்கு நாள் உடம்பு எப்படி எப்படியிருக்குமோ? உன்னைக் கவனித்துக் கொள்ள என்னைவிட்டால் வேறு யார் அம்மா இருக்கிறார்கள்?"

"ஏன் இல்லை? பகவான் என்னை அப்படியொன்றும் அனாதையாகவிட்டு விடவில்லை; அவர்தான் ரத்னாவை நமக்குத் துணையாக அனுப்பியிருக்காரே?-இன்றைக்கெல்லாம் வெந்நீருக்கும், வேறு காரியங்களுக்குமாக ஆயிரந்தடவை அவளைக் கூப்பிட்டிருப்பேன். கொஞ்சமாவது அலுத்துக் கொண்டாள் என்கிறாய்?-ஊஹும்! என்ன அடக்கம், என்ன ஒடுக்கம்! சொந்த நாட்டுப் பெண் கூடக் கெட்டாள், போடா?”

இதைக் கேட்டதும் எனக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. அவளைப் பற்றியே அம்மா இன்னும் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க மாட்டாளா? என்று நான் இருந்த இடத்தை விட்டு நகராமல் உட்கார்ந்திருந்தேன்.

“என்னமோ, அவளுக்கு எல்லா பாக்கியமும் கொடுத்த கடவுள் ஐசுவரிய பாக்கியத்தைத்தான் கொடுக்கவில்லை. ஏதாவது நல்ல இடமாகக கிடைக்க வேண்டுமே; போகிற இடத்திலாவது அவள் நன்றாயிருக்க வேண்டும்!"