பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பும் அருளும்

413

பாவம்! அவள் என்ன படித்த பெண்ணா, பணக்காரர் வீட்டுப் பொண்ணா?-நேருக்கு நேராக, 'ஹல்லோ, ஹெள ஆர்யூ?'என்று என்னைக் கேட்க?

மறுநாள் காலை அம்மாவை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன். கவலைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லையென்று சொல்லி அவர் ஆறு வேளை மருந்து கொடுத்தார். வீட்டுக்கு வந்தோம். அங்கே நாங்கள் கொஞ்சமும் எதிர்பாராத அதிசயம் ஒன்று எங்களுக்காகவே காத்துக் கொண்டிருந்தது. யாரோ அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லக் கேட்டு அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக அத்தையும் ராணியும் வந்தார்கள். பீரோக்களில் வருடக்கணக்காக உறங்கும் பட்டும் ஜரிகையும் மின்ன, பொன்னும் மணியும் குலுங்க நாலு பேருக்கு முன்னால் 'க்ரீச்'சென்று காரில் வந்து இறங்க வேண்டுமென்றால் சந்தர்ப்பம் எதுவாயிருந்தாலும் சரி-அதைப் பணக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டித்தானே இருக்கிறது?

ஆனால் ஒரு வித்தியாசம்-ராணி என்னைக் கண்டதும் அன்று போல் இன்று கைகுலுக்கவில்லை. அதற்குப் பதிலாக ஓர் அலட்சியப் புன்னகை புரிந்து விட்டு "ஆகாரம் என்ன, க்ளுக்கோஸ்?" என்று கேட்டாள்.

"அப்படியென்றால் என்ன?"என்று அம்மா திரும்பிக் கேட்டாள். அவ்வளவுதான் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது அவளுக்கு. "இப்படியும் ஒரு கர்நாடகம் இருக்குமா?"என்று எண்ணியோ என்னமோ, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்!

"பேசாமல் இருடி!" என்று அத்தை பெருமையுடன் மகளை அடக்கி விட்டு, "உடம்புக்கு இப்போது எப்படியிருக்கிறது? என்று கேட்டாள்.

"நீங்கள் வந்த பிறகு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது!" என்று வெறுப்புடன் சொல்லி விட்டு "ரத்னா கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாம்மா"என்றாள் அவள், படுக்கையில் குப்புறப்படுத்துக் கொண்டே.

அதற்குள் "படுக்கவே படுக்கிறாய்! இன்னும் ஒரு வேளை மருந்து சாப்பிட்டுப் படுத்துக்கோ அம்மா!"என்றேன் நான்.

வண்டியில் சென்று வந்த அலுப்பிலே அவள் கொஞ்சம் சிரமத்துடன் எழுந்து உட்கார்ந்தாள்; நான் மருந்தை எடுத்து வாயில்