பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



97

"நான் ஒடிக்கொண்டே இருக்கிறேனாம்; நீயோ அவர்களைக் கடைக்கண்ணால் கூடப் பார்க்கவே மாட்டேன் என்கிறாயாம்!” என்றான் காலதேவன்.

"காலம் போய்க்கொண்டே இருக்கிறது, கனவு நனவாகவில்லை என்றுதானே அவர்கள் கவலைப் படுகிறார்கள்?"

"ஆமாம், ஆமாம்."

"அதற்காக யாராவது கவலைப்படுவார்களோ?”

"கவலைப்படாமல் வேறு என்ன செய்வது? கலைத் தொண்டோ தற்சமயம் பூலோகத்தில் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டிய கருமமாயிருக்கிறது. கிருஷ்ண பரமாத்மா கலைஞர்களுக்கென்றே அந்தக் கீதோபதேசத்தைச் செய்தாரோ என்று கூடச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்களைப் போலவே தாங்களும் வாயும் வயிறும் படைத்தவர்கள் என்பதை யார் மறந்தாலும் கலைஞர்கள் மறக்க முடியுமா? மறந்தால் வாயும் வயிறுந்தான் அவர்களைச் சும்மா விடுமா? - இருந்தாலும் அவற்றை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் தங்களுடைய ஆத்ம திருப்திக்காக அவர்கள் கலைத்தொண்டில் இறங்குகிறார்கள். இந்த லட்சணத்தில் பலன் பொருளாகக் கிடைக்காவிட்டாலும் புகழாகவாவது அவர்களுக்குக் கிடைக்க வேண்டாமா?"

"திறமையிருந்தால்தான் புகழ் அவர்களைத் தேடிக்கொண்டு வருமே!"

"உண்மை!-ஆனால் திறமையில்லாதவர்களைப் பற்றி இப்பொழுது நான் பேசவில்லையே; திறமை யுள்ளவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன்!”

"அதற்கு அவசரப்பட்டால் முடியுமா? பொருத் திருந்து பார்க்கவேண்டும்."

கு.க-7