பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64. கட்டுப்பாடு

ஊர் முச்சந்தியில் ஒரு கூட்டம்; அந்தக் கூட்டத்துக்கு நடுவே சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த ஒரு குரங்கை இடது கையால் பிடித்துக் கொண்டு, வலது கையில் இருந்த கோலைத் தரையில் தட்டி, ‘தையத் தக்கா, தையத் தக்கா!' என்று தாளம் போட்டுக் கொண்டிருந்தான் ஒரு குரங்காட்டி. அவன் கட்டுப் பாட்டிலிருந்த குரங்கு அவனுடைய தாளத்துக் கேற்ற வாறு ஆடிக்கொண்டிருந்தது. திடீரென்று அதற்கு ஒர் அசட்டுத்தனமான யோசனை தோன்றிற்று; இவன் தாளத்துக்கு ஏற்றாற்போல்தான் நாம் எப்போதும் ஆடிக் கொண்டிருக்க வேண்டுமா? இவனுடைய கட்டுப் பாட்டுக்குக் கீழ்தான் நாம் என்றும் கட்டுப்பட்டிருக்க வேண்டுமா? நாமும் ஒருநாள் தாளம் போட்டு இவனை ஆட்டிவைத்தால் என்ன?’ என்று நினைத்த அது, குரங் காட்டியின் கையில் இருந்த கோலை, அவன் எதிர்பாராத விதமாகப் பிடுங்கி, அவனையே தன் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆட்டிவைக்க முயன்றது.

குரங்காட்டி கெட்டிக்காரன். அவன் அதற்கு இடம் கொடுப்பானா? "அவ்வளவு திமிரா உனக்கு?" என்று அது தன்னிடமிருந்து பிடுங்கப் பார்த்த கோலாலேயே அதன் தலையில் ஒரு போடு போட்டு அதை விரட்டி விட்டான்.

அவ்வளவுதான்; தன் மார்பைத் தானே தட்டிக் காட்டி, "இந்தக் குரங்கில்லாமல் உன்னால் எப்படிக் கூட்டம் சேர்க்க முடிகிறது என்பதை நான் பார்த்து விடுகிறேன்!" என்று அது ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிந்தது.