பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



104

"நமக்கு மேலே பெரிய பழங்களா, நாம் இல்லா விட்டால் அவை எப்படி மேலே நிற்குமாம்? பார்த்து விடுவோம் ஒரு கை!" என்றது ஒரு முரட்டுப் பழம் தன் முஷ்டியை உயர்த்தி.

"பேஷாய்ப் பார்க்கலாம்!" என்று அந்த முரட்டுப் பழம் சொன்னதை இன்னொரு புரட்சிப் பழம் அப்படியே ஆமோதித்தது.

"அதெல்லாம் சரி; எப்படிப் பார்ப்பதாம்?" என்றது ஒர் அசட்டுப் பழம்.

"அதோ, கூடைக்கு அடியில் ஒரு சிறு பொத்தல் இருக்கிறது பாருங்கள் அதன் வழியே நாம் ஒவ்வொருவராக வெளியேறிவிடுவோம்; பெரிய பழங்கள் கீழே சரிந்து விழுந்து அவமானப்படட்டும்!" என்றது ஒரு சமர்த்துப் பழம்.

"சரியான யோசனை!" என்று துள்ளிக் குதித்தது ஒன்று.

"தந்திரத்துக்கு நரிகூட நம்மிடம் பிச்சை வாங்க வேண்டும்!" என்று அதைத் தட்டிக் கொடுத்தது இன்னொன்று.

அவ்வளவுதான்; "அப்படியே செய்வோம், அப்படியே செய்வோம்!" என்று சிறிய பழங்க ளெல்லாம் கூடையை விட்டு ஒன்றன் பின் ஒன்றாக அந்தப் பொத்தலின் வழியே உருண்டு வெளியேறின. இதனால் சரிந்து விழுந்த பெரிய பழங்களைக் கண்டு அவை தங்கள் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தன.

பெரிய பழங்கள் ஒன்றும் சொல்லவில்லை; தலைக்கு ஒரு மெளனப் புன்னகை புரிந்துவிட்டுப் பேசாமல் இருந்தன.