பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67. ஏணி சொன்ன ஏழு கதைகள்

1
ன்னை வைத்து மேலே ஏறிச் சென்ற ஒருவனைப் பார்த்து, “மேலே போனதும் எல்லாரையும்போல நீயும் என்னை மறந்துவிடாதே!” என்றேன் நான்.

“உன்னை எதற்கு நான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்?” என்றான் அவன்.

“மறுபடியும் கீழே இறங்கி வருவதற்காகவாவது நீ என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டாமா?”

“மேலே போன எவனும் அதற்கும் மேலே போகத் தான் விரும்புவானே தவிர, உன்னை நினைவில் வைத்துக்கொண்டு கீழே இறங்க விரும்ப மாட்டான் என்பதை அறியாத உனக்காக நான் அனுதாபப் படுகிறேன்!” என்றான்.அவன்.

2

“எந்த மனிதனையும் மேலே ஏற்றிவிடும் நான் மட்டும் எப்போது பார்த்தாலும் ஏன் கீழேயே நின்று கொண்டிருக்கிறேன்?” என்று ஒரு நாள் என்னை நானே கேட்டேன்.

என் மனக் குரல் சொல்லிற்று:
“அதுதான் விதி! கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதனால் படைக்கப்பட்ட உனக்கும் அந்த விதி உண்டு!”