பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

அடைவதற்குப் பதிலாக நீயல்லவா அடைந்து தொலைப்பாய்!” என்றான் அவன், கொஞ்சங்கூடக் கூசாமல்.

5

ஒரு நாள் இரவு; மாடி அறையில் இருந்த தன் காதலியை நேர் வழியில் சென்று சந்திக்க முடியாத காதலன் ஒருவன், அந்த வீட்டுப் புழக்கடைச் சுவரின் மேல் என்னை வைத்து ஏறிக் குறுக்கு வழியில் சென்று அவளைச் சந்தித்தான்.

“ஆச்சரியமாயிருக்கிறதே! அத்தனை பேர் கீழே இருக்க நீங்கள் எப்படி மேலே வந்தீர்கள்?” என்று அவனை வியப்புடன் கேட்டாள் காதலி.

“உனக்காகப் பறந்து வந்தேன், கண்ணே!” என்று அவன் ஒரு போடு போட்டான்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கே வந்த அவன் காதலியின் அப்பா, “இப்படி எத்தனை நாட்களாக இங்கே நீ பறந்து வருகிறாய்?” என்று அவனைக் கேட்டார்.

அவ்வளவுதான்; அவன் சட்டென்று பாய்ந்து வந்த வழியே ஒடி, கீழே நான் சாத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பார்த்தான். என்ன ஏமாற்றம்! அவன் காதலியின் அப்பா என்னை அங்கிருந்து எடுத்து விட்டுத் தான் மேலே வந்திருக்கிறார் என்ற சங்கதி அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது; விழித்தான்! “ ஏன், வரும்போது பறந்து வந்தாயே, போகும் போது பறந்து போக முடியவில்லையா?” என்றார் காதலியின் அப்பா.