பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன் குட்டிக் கதைகள்

1. அடக்கம்

கொக்கரக்கோ’ என்று கோழி கூவிற்று; கடலில் குளித்துவிட்டு எழுந்தான் கதிரவன்.

‘வா தம்பி, வா!’ என்று தன் அலைக்கரங்களை நீட்டி அவனை அன்புடன் வரவேற்றது கடல்.

“நானாவது, உனக்குத் தம்பியாவது! இந்த உலகையே ஒளி மயமாக்கும் நான் எங்கே, நீ எங்கே? போ போ, எட்டிப் போ!” என்றான் கதிரவன்.

“இருக்கலாம்; என்னைவிட நீ பெரியவனாகவே இருக்கலாம். அதனாலென்ன, உன்னிடம் அன்பு செலுத்தக் கூடவா உரிமை இல்லை எனக்கு?” என்று கடல் கேட்டது.

“இல்லை; இல்லவே இல்லை. ஏனெனில், சிறியவர்கள் வழிபடுவதைத்தான் பெரியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்; அன்பு செலுத்துவதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!” என்று சொல்லிவிட்டு மேலே சென்றான் கதிரவன்.

“வந்துவிட்டாயா, வா வா!” என்று மேகக் கூட்டங்கள் ஆசையுடன் வந்து அவனைத் தழுவின. “எட்டி நில்லுங்கள்; இந்த உலகையே ஒளி மயமாக்கும் நான் எங்கே, நீங்கள் எங்கே? நீங்களாவது, என்னைத் தழுவுவதாவது?” என்று சொல்லிவிட்டு, இன்னும் மேலே சென்றான் கதிரவன்.

“வாப்பா, வா! எனக்காவது உன்னைத் தழுவ உரிமை உண்டா, இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே வந்தது காற்று.