பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. நம்பிக்கை

ரவு மணி பத்து; வீட்டுக்குக் கடைசியாக வந்து சேர்ந்த வீட்டுக்காரர் தெருக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு உள்ளே சென்றார்.

“நன்றி செலுத்துகிறேன். கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!” என்றது ஜன்னல்.

“ஏன்?” என்று கதவு கேட்டது.

“மீனைத் தண்ணீரில் வாழ வைத்ததுபோல மனிதனைக் காற்றில் வாழ வைத்தாரே, அதற்காக!”

“இல்லாவிட்டால்?”

“உன்னைச் சாத்திவிட்டுச் சென்றதுபோல என்னையும் அல்லவா அவர் சாத்திவிட்டுச் சென்றிருப்பார்?”

இதைக் கேட்டதும், “அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்?” என்று அலுப்பும் சலிப்புமாக ஆரம்பித்த கதவு, திடீரென்று தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “உன்னிடம் நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்றது ஜன்னலிடம்.

“சொல்லு?” என்றது ஜன்னல்.

“இப்பொழுதெல்லாம் மனிதன் தன்னைப்போன்ற மனிதனை நம்புவதில்லை; என்னைப்போன்ற கதவைத் தான்நம்புகிறான்!” என்றது கதவு.