பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இந்த முயற்சியில் அன்றைய இரவும் கழிந்து மறுநாள் பொழுதும் விடிந்தது. செடிகளிலிருந்த மற்ற மொட்டுக்கள் அத்தனையும் வழக்கம்போல் மலர்ந்து மணம் பரப்பின. அந்த மணம் வந்த திசையை நோக்கித் தற்செயலாகத் திரும்பிய விஞ்ஞானி, “இத்தனை மொட்டுக்களையும் இவ்வளவு அழகாக இவற்றுக்கு அருகில்கூட வராமல் மலர வைத்தது யார்?” என்றான் வியப்புடன்.

பெரியவர் சிரித்தார்; “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டான் விஞ்ஞானி.

“உன்னைப் பார்த்துச் சிரிக்காமல் அழவா சொல்கிறாய்?” என்றார் பெரியவர்.

✽✽✽

7. ஒருமைப்பாடு

ருக்கு அப்பாலிருந்த காட்டிலே மந்தை மந்தையாக ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. ‘ஏதாவது ஒர் ஆடு தன்னந் தனியாகத் தன்னை நோக்கி வராதா, தன் பசி தீராதா?’ என்ற ஏக்கத்துடன் ஒநாய் ஒன்று அந்த ஆட்டு மந்தைகளை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஊஹூம், எந்த ஆடும் தனித்து வரவில்லை!

ஒருமைப்பாட்டில் மனிதர்களுக்கு இல்லாத நம்பிக்கையா இந்த ஆடுகளுக்கு? அதிலும் அந்தப் பாழாய்ப்போன ஒருமைப்பாடு தன்னுடைய பசியைத் தீர்த்துக் கொள்ள உதவாதபோது?