பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


“என்ன?" என்று ஆவலுடன் கேட்டது நீலம்.

"நமக்குள் ஒரு போட்டி வைத்துக்கொள்வோம்; அந்தப் போட்டியில் எவன் வெற்றியடைகிறானோ, அவனே பெரியவன் என்று நாம் ஒப்புக்கொள்வோம்!" என்றது மரகதம்.

"என்ன போட்டி அது?" என்று எல்லோரையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து கேட்டது வைரம்.

"பேராசை பிடித்த மனிதனை, நம்மில் எவன் 'போதும் போதும்' என்று சொல்ல வைக்கிறானோ, அவனே நமக்கெல்லாம் பெரியவன். என்ன சொல்கிறிர்கள், நீங்கள்?" என்று கேட்டுவிட்டு, எல்லா வற்றையும் சேர்ந்தாற்போல் ஒரு பார்வை பார்த்து வைத்தது மரகதம்.

அவ்வளவுதான்; சரியான யோசனை! சரியான யோசனை' என்று எல்லா ரத்தினங்களும் ஏககாலத்தில் தலையை ஆட்டின.

"சரி; நீ போ முதலில்!” என்றது மரகதம் வைரத்தை நோக்கி.

வைரம் சென்றது; ஆனால் வாட்டத்துடன் திரும்பி வந்தது.

"என்ன?" என்று கேட்டது மரகதம்.

"முடியவில்லை அப்பனே, முடியவில்லை; அவனைத் திருப்தி செய்ய என்னால் முடியவில்லை!" என்று கையை விரித்தது வைரம்.

சரி, நீ போ இரண்டாவதாக!' என்றது மரகதம் வைடுரியத்தை நோக்கி.

வைடுரியம் சென்றது; ஆனால் அதுவும் வாட்டத் துடன் திரும்பி வந்தது.