பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


உலகம் சிரித்தது; "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டான் மனிதன்.

"உன்னுடைய அறியாமைக்காகத்தான் சிரிக்கிறேன்!” என்றது உலகம்.

“என்னுடைய அறியாமைக்காகவா!"

"ஆம், எதை வென்று என்ன பிரயோசனம்? உன்னை நீ வெல்லவில்லையே? அதனால்தான் இன்னும் நான் உருப்படாமல் இருக்கிறேன்!” என்றது உலகம்.

荔,荔,莎

11. இன்பம்

கல் ஒன்று இடறிற்று; கட்டை விரலின் நகம் பெயர்ந்து ரத்தம் குபுகுபு"வென்று வழிந்தது.

"ச்சூச்சூ!" என்றது வாய்; கண்கள் கண்ணிர் சிந்தின. வாய் சிரித்தது; "ஏன் சிரிக்கிறாய்?" என்று கண்கள் கேட்டன.

"ஒன்றுமில்லை; உங்களுடைய அசட்டுத்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன்!"என்று கூறியது வாய்.

ஆணியை அடித்துக்கொண்டிருந்த சுத்தியல் தவறிற்று; அதைப் பிடித்துக் கொண்டிருந்த கை அதனால் அடிபட்டு வீங்கிற்று.

"ச்சூச்சூ" என்றது வாய், கண்கள் கண்ணிர் சிந்தின. வாய் சிரித்தது; "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டன, கண்கள்.

"ஒன்றுமில்லை; உங்களுடைய அசட்டுத்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன்!” என்று கூறியது வாய்.