பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


என்று சொல்வாரும் இல்லை; 'இல்லை' என்று சொல்வாரும் இல்லை.

கொஞ்சம் துணிந்து, மெல்லக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். அவ்வளவுதான்; "புத்தி இருக்கிறதா, உனக்கு? இல்லை கேட்கிறேன்; புத்தி இருக்கிறதா, உனக்கு?" என்று சீறிக்கொண்டே அவனை நோக்கிப் பாய்ந்து வந்தார் அந்த வீட்டுக்காரர்.

அவன் சற்றே பின் வாங்கி, "கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! பசி வயிற்றைக் கிள்ளுகிறது; ஒரு பிடி சோறு இருந்தால் போடச் சொல்லுங்கள், ஐயா!" என்றான் பரக்க விழித்து, பல்லை மிகக் காட்டி.

அவன் சொன்னதை அவர் காதில் போட்டுக் கொள்ள வில்லை; "நான் கேட்பதற்குப் பதில் சொல்; புத்தி இருக்கிறதா, உனக்கு 2 இல்லை கேட்கிறேன்; புத்தி இருக்கிறதா, உனக்கு?" என்று மறுபடியும் கேட்டுக் கொண்டே முன்னேறி, "இங்கே பார், என்ன எழுதி யிருக்கிறது?" என்றார் கேட்டின் முகப்பில் மாட்டப் பட்டிருந்த சிறு போர்டு ஒன்றைச் சுட்டிக் காட்டி.

அவன் பார்த்தான்; பார்த்துவிட்டு, "நாய்கள் ஜாக்கிரதை என்றுதானே எழுதியிருக்கிறது?" என்றான் ஒன்றும் புரியாமல்.

"அதைப் பார்க்காமல் உள்ளே வரலாமா? இல்லை, கேட்கிறேன்; அதைப் பார்க்காமல் உள்ளே வரலாமா?" என்று இரைந்தார் அவர்.

"மன்னியுங்கள்; "மனிதர்கள்தானே உள்ளே இருக்கப் போகிறார்கள் என்று நான் நினைத்தது தப்புத்தான்!" என்றான் அவன் அமைதியாக.

號。號。敬