பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. வாலும் தலையும்


ஒரு நாள் நாயிடம், "உன்னைக் கண்டால் எனக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்குக்கூட பொறாமையா யிருக்கிறது!" என்றது பூனை.

"ஏனாம்?" என்று கேட்டது நாய்.

"வாலை ஆட்டியாட்டிக் காட்டியே நீ பிழைத்துக் கொள்கிறாயல்லவா, அதனால்தான்!” என்றது பூனை சிரித்துக்கொண்டே.

நாய் அதைத் திருப்பிக் கேட்டது;

"மனிதர்களில் சிலர் தலையை ஆட்டியாட்டிக் காட்டியே பிழைத்துக்கொள்கிறார்களே, அதற்கென்ன சொல்கிறாய், நீ?"

பூனை வாயைத் திறக்கவில்லை.

號。逝。號

15. நீதி

பொற்கொல்லருக்கு எதிர்த்தாற்போல் இருந்த கண்ணாடிக் கூண்டுக்குள், நீதியின் சின்னம் நானே!" என்பதுபோல் தராசு தலை நிமிர்ந்து நின்று கொண் டிருந்தது.

அந்தத் தராசின் ஒரு தட்டில் தங்கத்தையும், இன்னொரு தட்டில் தாமிரத்தையும் வைத்து நிறுத்தார் பொற்கொல்லர்.

தங்கம் வைத்த தட்டு தாழ்ந்தது; தாமிரம் வைத்த தட்டு உயர்ந்தது!