பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. மாடும் மனிதனும்

ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தன்னை விற்றவனைத் தேடிக்கொண்டு வந்தது மாடு.

வாங்கினவனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; "இனி மேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா?" என்று அதை "வாங்கு, வாங்கு" என்று வாங்கிவிட்டான்.

வீறிட்டலறிய மாட்டை நோக்கி அதனுடன் வசித்த ஆடு கேட்டது:

"விற்றவன் உன்னை அன்றே மறந்துவிட்டதுபோல் நீயும் அவனை அன்றே மறந்துவிட்டிருந்தால் இந்தக் கதிக்கு ஆளாகி யிருக்கமாட்டாயல்லவா?”

கண்ணிரும் கம்பலையுமாக மாடு சொல்லிற்று:

"அது எப்படி முடியும்? நான் மனிதனாகப் பிறக் காமல் மாடாக அல்லவா பிறந்துவிட்டேன்?"

湖。撈 號

19. குற்றம் எங்கே?

"நீல வானம், நெடுங்கடல், பனி மூடிய மலைச் சிகரங்கள், பழம் உதிரும் சோலைகள், பசுமை நிறைந்த நெல் வயல்கள், பூத்துக் குலுங்கும் செடிகள் கொடிகள், கொட்டும் அருவி, குளிர் தருக்கள்-ஆஹா இந்த உலகமே ஒர் அற்புதம், அற்புதம்" என்று பாடிய வானம் பாடியுடன் சேர்ந்து, அதன் பாட்டுக்கேற்பத் தானும் தன் தோகையை விரித்து ஆடியது மயில்.