பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. கருணை

தூண்டில் முள்ளில் குத்தப்பட்டிருந்த ஒரு புழு துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், 'ஆஹா, மனிதனின் கருணையே கருணை! எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தேடிப் பிடித்து, தூண்டில் முள்ளில் வேறு குத்தி, தண்ணிருக்குள் அல்லவா விட்டிருக்கிறான்?" என்றது நன்றியுடன்.

"அட முட்டாளே! கருணையாவது, கத்தரிக் காயாவது? அவன் உன்னைப் பிடித்துச் சாப்பிடுவதற்காக வல்லவா அதை ஏவி விட்டிருக்கிறான்!” என்றது தவளை.

"நன்றிகெட்ட தனமாகப் பேசாதே! எப்போதும் நல்லதையே நினை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்; கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்!" என்றது அது.

"செய் அப்பனே, செய்; உனக்கு எது நல்லதோ அதையே செய்!” என்றது இது.

அவ்வளவுதான்; துடித்துக் கொண்டிருந்த புழுவை விழுங்கிய மீன் துடித்துக் கொண்டே, "ஐயோ, ஏமாந் தேனே!” என்றது பரிதாபமாக.

"நன்றி கெட்ட தனமாகப் பேசாதே கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்; நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்" என்றது தவளை.

荔,荔荔