பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


"என் கடமை உன்னைத் துரத்துவதுதான்!" என்று சொல்லிக்கொண்டே அதைத் துரத்திற்று நாய்.

"டுமீர்" என்று ஒரு சத்தம்; சுருண்டு விழுந்த முயலைப் பாய்ந்து வந்த கழுகு தன் கால்களால் இறுகப் பற்றிக் கொண்டு மேலே பறந்தது.

இதைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற நாய், மறுகணம் தன்னைத்தானே சமாளித்துக்கொண்டு சொல்லிற்று:

"இது பலனை எதிர்பாராமல் செய்யும் கழுகின் கடமைபோலும்!”

荔,荡,荔

33. கலை

புரவி ஆட்டக்காரன் ஒருவன் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆட, அவனைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும், "பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்கே இவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்தால் நிஜக்கால் குதிரை ஆட்டத்துக்கு இன்னும் எவ்வளவு பெரிய கூட்டம் சேரும்" என்று நினைத்த ஒரு குதிரை உடனே அந்தக் கூட்டத்துக்குள் உற்சாகத்துடன் புகுந்து, "தா, தை” என்று ஆட ஆரம்பித்தது.

அவ்வளவுதான்; அந்த நிஜக்கால் குதிரை ஆட்டத்தைக் கண்டதும், சிறியவர்களெல்லாம் அலறி ஒட, பெரியவர்களெல்லாம் கைக்குக் கிடைத்ததைக் கொண்டு அதை நையப் புடைத்து விரட்டினார்கள்.