பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படிப்பதற்கு முன்

குட்டிக்கதைகள் என்பது தமிழ் இலக்கியத்தில் இன்னொரு பரிணாமம்; இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அமரர் விந்தன். அவர் எழுதிய (1) குட்டிக் கதைகள் (2) மகிழம்பூ ஆகிய இரு நூல்கள் ஒரே தொகுப்பாகப் பதிப்பிக்கப்பட்டு இன்று உங்கள் கைகளில் திகழ்கிறது.

தமிழ் இலக்கியத்தில் பல புதிய உத்திகள், பரிசோதனை முயற்சிகளை செய்தவர் விந்தன். ‘குட்டிக்கதைகளென்ன’ ‘ஒ மனிதா’ போன்ற கட்டுரைகளென்ன, ‘மிஸ்டர் விக்கிர மாதித்தன் கதைகள்’ போன்ற வித்தியாசமான கற்பனையென்ன, ‘பசி கோவிந்தம்’ போன்ற புடைநூலென்ன ‘பாட்டினில் பாரதம்’ போன்ற கவிதை முயற்சியென்ன, எனப் பல பரிசோதனைகள் நிகழ்த்தியவர் விந்தன். இப்பரிசோதனைகள் பிற எழுத்தாளர்கள் முயற்சிக்காததாகும். அவர் சொல்வார், “எழுத்தாளனுக்கு எழுத வராதது எதுவுமில்லை, ஒரு முழு எழுத்தாளனுக்கு கதை எழுத வரும், கவிதை எழுத வரும், கட்டுரை எழுத வரும், விமர்சனம் எழுத வரும். இது எனக்கு வராது என்று சொல்பவன் முழுமையான எழுத்தாளனே அல்ல”, என்பார்.

ஆனால், 50 வருடங்களாக விந்தனின் நூல்கள் ஒரு சேர சந்தையில் கிடைப்பதில்லை. இது அவருக்கு நேர்ந்த பொருளாதார நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட ஒரு சோகம். இதனால் பல இலக்கிய விமர்சகர்கள், ஏன் அரசாங்கமும் கூட அவரை மறைத்து விட்டார்கள்; மறந்து விட்டார்கள்.