பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


"கடைசி வரை அம்மா வராமலே இருந்து விட்டால்......?”

"என்னை நீயும் உன்னை நானும் சாப்பிட்டு விடுவதா, என்ன?-பேசாமல் இரு; அப்படி வரா விட்டால் அப்புறம் பார்த்துக் கொள்வோம்!" என்று அவற்றில் ஒன்று எரிந்து விழுந்தது.


இன்னொன்று, "அதுவரை பசியோடு இங்கேயே கிடந்து தவிக்க வேண்டுமாக்கும்!" என்று அலுத்துக் கொண்டே, தன் கால் விரல்களில் ஒன்றை லேசாகக் கடித்து, அதில் கசிந்து வந்த ரத்தத்தை நக்கி ருசி பார்த்தது.

அதற்குள் அவற்றின் அம்மா சற்றுத் துரத்தில் உறுமிக்கொண்டு வரும் சத்தம் கேட்கவே, இரண்டு குட்டிகளும் ஏக காலத்தில் துள்ளிக் குதித்து அதை வரவேற்கத் தயாராயின.

தாய்ப்புலி தங்களை நெருங்கியதுதான் தாமதம்; குட்டிப் புலிகள் இரண்டும் ஏமாற்றம் அடைந்தன. ஏனெனில், அவை எதிர்பார்த்ததுபோல் அம்மாவின் வாயில் எந்த விதமான இரையும் இல்லை.

'ஏன் அம்மா, ஒன்றும் கிடைக்கவில்லையா?”

"கிடைத்தது; அதற்குள் இன்னொரு புலி வந்து......"

“என்ன கிடைத்தது?"

"ஒரு கொழுத்த காட்டுப் பன்றி. தன்பாட்டுக்கு அது ஒரு மரத்தடியில் உதிர்ந்து கிடந்த பழங்களைப் பொறுக்கித் தின்றுகொண்டிருந்தது. நான் அதன் மேல் பாயத் தயாராவதற்குள் இன்னொரு புலி வந்து அதைக் கவ்விக்கொண்டு போய்விட்டது......"

"அதை நீசும்மாவா விட்டாய்?" "சும்மா விடாமல் என்ன செய்வதாம்?"