பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


அவ்வளவுதான்; "சரேல்" என்று சறுக்கிற்று; "தொபு கடீர்" என்று கீழே விழுந்தான்.

அடுத்த நிமிடம் அவனைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது.

"த்சோ, த்சோ! பார்த்து வந்திருக்கக் கூடாதா, சார்?" என்றார் ஒருவர்.

"ஏதாவது அடி, கிடி பட்டுவிட்டதோ?’ என்றார் இன்னொருவர்.

கீழே விழுந்தவனுக்கு அவர்களுடைய அனுதாபம் அந்தச் சமயத்தில் ஆறுதல் அளிக்கக்கூடியதாயில்லை. அதற்குப் பதிலாக அது அவமானத்தையே அளிப்பதா யிருந்தது. எனவே, சட்டென்று அவன் விழுந்த சுவடு தெரியாமல் எழுந்து மேலே நடந்தான். 'இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்தால் இவர்கள் நம் பல்லையே பிடித்து ஆட்டிப் பார்த்தாலும் பார்த்து விடுவார்கள் போலிருக்கிறதே!-நல்ல ஜனங்கள், நல்ல அனுதாபம்!" என்று அவனுடைய வாய் முணுமுணுத்தது. அடுத்த கணம் அவனைச் சுற்றிக் கூடியிருந்த கூட்டம் ஒரு 'வந்தன'த்துக்குக்கூட வழியில்லாமல் கலைந்தது.

அவர்கள் அனைவரும் போன பிறகு வாழைப்பழத் தோல் தனக்குத் தானே சொல்லிக்கொண்டது:

"நசுக்கியவனுக்காகத்தான் எல்லாரும் அனுதாபப் படுகிறார்களே தவிர, நசுக்கப்பட்டவனுக்காக ஒருவர் கூட அனுதாபப்படவில்லையே!”

院。院。渤