பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51.பயம்

 வானுலகிலே எமதர்ம ராஜனின் தர்பார் நடந்து கொண்டிருந்தது. எம கிங்கரர்கள் பூலோகத்திலிருந்து பிடித்துக்கொண்டு வந்திருந்த ஜீவராசிகளை ஒவ்வொன்றாக அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தனர். அவரவர்கள் செய்த குற்றத்துக்குத் தக்கபடி அவன் தண்டனை விதித்துக்கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் எந்த விதமான முன்னறிவிப்புமின்றி இரண்டு ஜீவன்கள் வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்து எமனுக்கு முன்னால் நின்றன.

அவற்றில் ஒன்று மனிதன் இன்னொன்று பாம்பு.

"சமய சந்தர்ப்பம் தெரியாமல் இவர்களை எனக்கு முன்னால் திடீரென்று கொண்டுவந்து நிறுத்தியவர்கள் யார்?" என்று பொங்கி வந்த கோபத்தில் துள்ளி எழுந்து கேட்டான் எமன்.

கிங்கரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பீதியுடன் பார்த்துக்கொண்டனர். ஏனெனில், அந்த ஜீவன்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது!

"உங்களில் யாரும் இவர்களை அழைத்துக் கொண்டு வரவில்லையா?” என்று உறுமினான் எமன்.

"இல்லை, அரசே!" என்று கிங்கரர்கள் கையை விரித்தனர்.

அடுத்த கணம் எமனின் பார்வை சித்திர குப்தனின் பக்கம் திரும்பியது; அவன் ஆசனத்தை விட்டு எழுந்து நின்றான்.

"உமக்கு இவர்களைப்பற்றி ஏதாவது தெரியுமா? நீர்தான் இவர்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னிரா?" என்று எமன் சித்திரகுப்தனை நோக்கிக் கேட்டான்.