பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


"இல்லை; நான் இவர்களை அழைத்துக் கொண்டு வரச் சொல்லவில்லை!" என்றான் சித்திரகுப்தன்.

"சரி; இவர்களுடைய ஆயுசு முடிந்துவிட்டதா என்று உம்முடைய கணக்குப் புத்தகத்தைப் புரட்டிப்பாரும்!” என்று எமன் கட்டளையிட்டான்.

சித்திரகுப்தன் முணுமுணுத்துக் கொண்டே, இப்படியும் அப்படியுமாகச் சிறிது நேரம் புத்தகத்தைப் புரட்டினான். பிறகு, "இல்லை; இவர்களுடைய ஆயுசு இன்னும் முடியவில்லை!" என்றான்.

மறுகணம் எமதர்ம ராஜனின் பார்வை அந்த மனிதனின் மீதும் அந்தப் பாம்பின் மீதும் விழுந்தது.

"இது என்ன, ஆச்சரியமாயிருக்கிறதே! நீங்களாகவே என்னைத் தேடி வந்துவிட்டீர்களா, என்ன?" என்று அவர்களை நோக்கிக் கேட்டான்.

"ஆம், எமப் பிரபுவே!" என்று சொல்லிவிட்டு இரண்டு ஜீவன்களும் தலைகுனிந்தன.

"அப்படியானால் நீங்கள் இங்கே வருவதற்கு முன்னால் செத்திருக்க வேண்டுமே!-யார் உங்களைச் சாக அடித்தது?”

"எங்களை நாங்களே சாக அடித்துக்கொண்டோம்!"

"வேடிக்கைதான்; இந்த விபரீதம் எப்படி நிகழ்ந்தது?"

"ஒரு நாள் இரவு கையில் லாந்தர் விளக்குடன் நான் வயல் வெளிக்குச் சென்று கொண்டிருந்தேன்; வரப்பின் மேல் கிடந்த பழுதையைப் பாம்பென்று எண்ணிப் பயந்து போய் அலறிக் குதித்தேன் அப்படிக் குதித்த இடத்தில் நிஜமாகவே இந்தப்பாம்பு இருந்து என்னைக் கடித்துவிட்டது!" என்றான் அவன்.

"அதனால் என் தலையும் நசுங்கி விட்டது!" என்றது பாம்பு.