பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


'ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று மூலதனம் ஆத்திரத் துடன் கேட்டது.

'ஒன்றுமில்லை; இத்தனை வருடங்கள் எங்கே தூங்கிக்கொண்டிருந்தீர்கள் என்று தெரியாமல்தான் சிரிக்கிறோம்!"

இந்தச் சமயத்தில் லாபம் குறுக்கிட்டு, 'வேலை யொன்றும் இல்லாவிட்டால் தூங்காமல் என்ன செய்வதாம்?' என்று தன் எசமானுக்காகப் பரிந்து பேசிற்று.

ஸ், பேசாதே!' என்று அதன் கன்னத்தில் ஓங்கி அறைந்து, காவலர்களின்மேல் தனக்கிருந்த ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது மூலதனம்.

'இல்லை, பேசவில்லை!" என்று லாபம் வாயைப் பொத்திக் கொண்டது.

'கபர்தார் நான் யார் தெரியுமா? எல்லாம் வல்ல மூலதனமாக்கும்!" என்று காவலர்களையும் கொஞ்சம் மிரட்டிப் பார்த்தது மூலதனம்.

'தெரியும்; ஆனால் நாங்கள் யார் தெரியுமா? வருங்காலத்தில் எங்கள் சந்ததிகளாவது போதுமான அளவுக்கு வாழ்க்கை வசதிகளைப் பெற வேண்டு மென்பதற்காக நிகழ் காலத்தில் சாகத்துணிந்தவர்கள். எனவே உயிருக்கு அஞ்சவில்லை நாங்கள்!' என்று முகத்தில் அடித்தாற்போல் அவர்கள் பதில் சொன்னார்கள்.

பாவம், மூலதனம் என்ன செய்யும்?-தன்னை ஒரு வாறு சமாளித்துக் கொண்டு, “சரி, எங்கே என் நண்பர் மணிமகுடம்? அதையாவது சொல்லப் போகிறீர்களா, இல்லையா?” என்று சற்றே அடக்கத்துடன் கேட்டது.

'நன்றாய்ச் சொல்கிறோம்-கண்காட்சிச் சாலையில் இருக்கிறார்; போய்ப் பாருங்கள்!"