பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 153

ஒவ்வொரு முறையும் விதிகளை மீறும் பொழுதெல்லாம் தண்டிக்க வேண்டியது நடுவரின் கடமை என்பது ஒரு தவறான கருத்தாகும். அவ்வாறு செய்வது ஆட்டத்தின் வேகத்தைத் தடை செய்வதோடு, ஒருவித மன எரிச்சலையும் உண்டாக்கும்.

தவறு இழைப்பவருக்கு அதனால் பலன் ஏதாவது கிடைக்காத நேரத்தில் அதாவது கையில் பந்து படுதல், எதிர்பாராத விதமாக உடம்பில் பந்து இடித்தல் அல்லது பந்து பட்டுத்திரும்புதல் போன்ற சில்லறைத் தவறுகளுக்காக நடுவர் தண்டிப்பது தேவை இல்லாத ஒன்றாகும். -

தடுத்தல், அயலிடம் போன்று வன்மையாக விதியை மீறும் செயல்களுக்குத் தண்டனையாகத் தனி அடி, ஒறுநிலை முனை அடி அல்லது ஒறுநிலை அடி என வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற தண்டனைகளைக் குறைந்த அளவே பயன் படுத்தினால், நடுவருக்கும் நல்லது. ஆட்டக்காரர்களுக்கும் தண்டனையைப் பற்றிய ஒருவித பய உணர்ச்சி இருக்கும். ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக ஆடும் தன்மை உள்ள தடுத்தல் அல்லது விதிகளுக்குப் புறம்பாக அநாகரிகமாக நடந்து, மற்ற ஆட்டக் காரர்களின் உற்சாகத்தைக் கெடுத்து, ஆட்டத்தின் சிறப்பை, நல்ல நோக்கத்தை மறந்து ஆடுகின்ற ஒரு ஆட்டக்காரரைக் கடுமையாகத் தண்டிக்காமல், கண்டிப்பின்றி கருணையுடன் விட்டுவிடுகின்ற ஒரு நடுவர், சிறந்த நடுவராக ஆகமாட்டார். -

நடுவர்கள் ஒறுநிலை அடி விதியைப் போதுமான அளவுக்குப் பயன்படுத்துவது இல்லை என்றும் பொதுவான விளக்கங்கள் என்ற பகுதியில் உள்ள விதிகளைக் காக்கும் குழுவினர்கள் (Defenders) வட்டத்திற்கு வெளியிலும் 25 கெசப் பரப்பிற்குள்ளாகவும், வேண்டுமென்றே மீறுகிற பொழுது, அவர்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒறுநிலை முனை அடிகளைத்தண்டனையாகத்தருவது இல்லை என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது.

அழகுற சிறப்பாகத் தடையின்றி ஆட்டத்தை நடத்துவதற்கு, ஆட்டக்காரர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் முடியும் என்ற ஒரு எண்ணத்தை நடுவர் ஊட்டிவிட வேண்டும்.

மேலே கூறியவை அனைத்தும், அகில உலக வளைகோல் பந்தாட்டக் கழகத்தினரால் பயன்படுத்தப்பட்டு உலகம் முழுதும் பின்பற்றப்படுகின்ற விதிகள் ஆகும்.