பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நீச்சல் விளையாட்டின் கதை

தண்ணி நிரம்பித்ததும்பிக் கொண்டிருக்கிறது.அந்தத் தடாகம். அதன் கரையோரம், தண்டூன்றிக் கொண்டு, தன்தேகம் நடுங்குகிற ஒரு முதியவர் வருகிறார். ஆடிவரும் அலைக்கூட்டம் அவரைக் கையொலி எழுப்பி அழைப்பது போன்ற ஒரு பிரமை.

நினைவுகள் துள்ளியெழுந்து, மஞ்சுவிரட்டுக் காளை போல் திமிறிக் கொண்டு, அவரது நெஞ்சுத் திடலில் குதிபோடுகின்றன.

உயர்ந்தோங்கிய மரம். அதன் கிளைகள் சரிந்து கீழிறங்கி இருக்கின்றன. கிளை மீது ஏறி, அங்கிருந்து அவர் அந்த அழகுத் தடாகத்துள் குதிக்கிறார். கரையில் இருப்பவர்கள் மருள்கிறார்கள். கரை பிதுங்கிக் கொப்பளிக்கிறது தண்ணிர் வெள்ளம்.

‘திடும் எனப் பாய்ந்து, முக்குளித்து மூழ்கிச் சென்று, அடி வரை முனைந்து, தரை மணலைக் கொண்டு வருகிறார். தானும் களித்தது போல, காண்பவரையும் களிப்பில் ஆழ்த்துகிறார்.

தான் இளைஞனாய் இருந்தபோது, செய்த செய்கை அவரது சிந்தையுள் தேனாய் இனிக்கிறது. மானாய்ப் பறக்கிறது. மயிலாய் நடனம் ஆடுகிறது. ஆடிய காலத்தைக் கல்லா இளமை என்கிறார், தொடித்தலை விழுத்தண்டினார் எனும் புலவர் (புறநானூறு-243).

சங்ககாலத்தின் சிங்கத் தமிழர்கள் துறைதோறும் சென்று நீந்திக் களித்த நிகழ்ச்சிகள் எத்துணையோ உண்டு. அவற்றிலே மேலே காட்டியதும் ஒன்று.

‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழியைப் படைத்து, உலகெங்கிலும் கலம் செலுத்தி, கடலடக்கி வாழ்ந்த தமிழர்கள் வாழ்வில், நீச்சல் விளையாட்டு நித்தம் நிகழ்ந்த ஒன்றுதான.

இன்று நாம் கொண்டாடிக் குளித்து மகிழும் ஆடிப் பெருக்கும் அதன் பிரதிபலிப்புதானே! தமிழர்கள் போலவே உலகெங்கிலும் உள்ள மக்கள் இதுபோன்ற இனிய விளையாட்டை ஆடி மகிழ்ந் திருக்கின்றனர். ஆழ்சூழ் உலகம் அல்லவா இது!