பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. பந்து பிறந்த கதை

“மாட்சிமை தங்கிய மகாராஜா அவர்கள் மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி ஒன்றின் இறுதியாட்ட விழாவிற்குத் தலைமை தாங்கிப் பரிசுகள் வழங்க இசைந்துவிட்டார்” என்ற செய்தி, விளையாட்டு ரசிகப் பெருமக்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தி விட்டது. கடல்போல மக்கள் வெள்ளம் அன்றைய ஆட்டத்தைக் காண வந்து குழுமியிருந்தது.

வேடிக்கை பார்க்கும் மக்களுக்கே இத்தனை வேகமும் வெறியும் இருந்தது என்றால், விளையாடும் வீரர்களுக்கு உவப்பும் உற்சாகமும் எப்படி இருந்திருக்க வேண்டும்! அவர்களது உணர்ச்சிமிக்க உற்சாகத்தின் உச்சக் கட்ட விளையாட்டில், பந்து அவர்களது காலில் படாதபாடுபட்டுப் பறந்தது. மக்களுக்கோ மகிழ்ச்சிப்பெருக்கு, மன்னருக்கோ மாபெரும் கவலை. பந்தை உதைக்கப் பாய்ந்தோடி பலர் மோதிக் கொள்ளும் பொழுதெல்லாம், மன்னர் வேதனையால் துடித்தார், துவண்டார், துள்ளி எழுந்தார்.