பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

பந்து என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், நம் நாட்டுப் பந்து, பெண்களின் மென்மையான கைகளுக்கேற்ப,பூக்களில் ஆக்கப்பட்ட பந்தாகவே பரிணமித்திருக்கின்றது. பந்தாட்டம் பெண்களுக்குரிய ஆட்டங்களில் ஒன்றாகும்.

மேல் நாடுகளில் ஆண்கள் ஆடக்கூடிய விளையாட்டுக்களில் பந்து இடம் பெற்றிருந்தாலும், பூப்பந்தாக இல்லாமல் கடினப் பந்தாகவே காட்சியளிக்கின்றது. என்றாலும். பந்து எல்லாம் உருண்டை வடிவமாகவே அமைந்திருக்கின்றது என்பதையும், அது காலம் தந்த கற்பனையின் வடிவால் பிறந்து, அடுத்தடுத்து வந்த அற்புத அனுபவத்தினால், கனிந்து, இன்று துள்ளி ஓடும் தன்மையிலே மலர்ந்து வளர்ந்திருக்கிறது என்பதே பொருந்தும்.

என்று பிறந்தது. எங்கு பிறந்தது பந்து என்ற கேள்விகளுக்கெல்லாம் ஆதிகாலந் தொட்டே பிறந்தது என்ற ஒரு விடையோடு நாம் திருப்தியடைந்து விடுகிறோம்.

இன்று சிறந்து விளங்கும் விளையாட்டுக்கள் அனைத்திலும், பந்து இல்லாத ஆட்டமே இல்லை என்ற அளவுக்கு பந்து இடம் பெற்றிருக்கின்றது. அந்தப் பந்துகளின் அளவு 1½ அங்குல விட்டத்திலிருந்து 6 அடி விட்டம் அளவுள்ளது வரை பெரிதாக அமைந்திருக்கின்றன. ‘ரக்பி’ என்ற ஆட்டத்திற்குரிய பந்து மட்டுமே தேங்காய் வடிவம் கொண்டதாக உள்ளது. மற்ற எல்லா ஆட்டத்திற்குரிய பந்துகள் அனைத்தும் உருண்டை வடிவானவையே.

பந்துகள் பலவிதம் என்றாலும் மக்களுக்காகப் பயன் படுவதில் ஒரேவிதமாக, ஒரே இனமாக, ஒரே தரமாக இருந்து, மக்கள் இனத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றன. மக்கள் மனதை மகிமைப்படுத்துகின்றன.