பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

தோழிகள் பொந்து ஒன்றில் பந்து புகுந்த நிலைகண்டு மனம் புழுங்குகின்றனர். பந்தை எடுக்க வேண்டும் என்றால், அதிலிருக்கும் பெட்டி ஒன்றைப் புரட்டி எடுக்க வேண்டும்.

தோழிகள் முயன்றனர். தோற்றனர், அரசனிடம் சேதி சென்றது ஆணையிட்டான். சேவர்கள் வந்தனர். தோற்றனர். காலம் போவதைச் சகிக்காத பிராட்டி தானே வந்து, ஒரே கையால் எளிதாக அகற்றி அப்புறப்படுத்தி விட்டு, பந்துடன் சென்றுவிடுகின்றாள்.

மகள் செய்த செயலில் மனம் தடுமாறிய மன்னர், அருகிருக்கும் பெட்டியைத் திறந்து பார்க்கிறார், அழகான பெரிய வில்லொன்று இருக்கிறது. பலர் கூடியும் தூக்க முடியாத பளுவை எளிதாகத் தூக்கிய எழிலரசிக்கு ஏற்ற மணாளன், இந்த மாபெரும் வில்லைத் தூக்கி வளைக்கின்ற வில்லாளனாக, வீரனாகத்தான் இருக்க வேண்டுமென்று விரும்பினார். அவர் எடுத்த முடிவுதான் சீதையின் சுயம்வரம். அங்கேபோன இராமர், அவர் நிகழ்த்திய அற்புதம் எல்லாம் தான் நீங்கள் அறிந்த கதையாயிற்றே !

ஆரம்ப காலத்தில் பூச்சரத்தைப் பந்தாகச் சுருட்டிக் கட்டி விளையாடினார்கள் என்றும் அதுவே பிற்காலத்துப் பெண்களிடைத் துள்ளும் பந்தாக மாறி, உள்ளம் கொள்ளை கொள்ளும் ஒப்பற்ற ஆட்டமாக மாறி வந்திருக்கிறது என்றும் கூறுகின்றார்கள். இந்தத் துள்ளும் பந்தை வைத்துக் கொண்டுக் குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர், அதன் கதாநாயகி வசந்தவல்லியை வருணிக்கும் அழகே அழகு. கவர்ச்சியே கவர்ச்சி.

சிவபெருமான், தனது தானைத் தலைவர்களோடும் மானமறவர்களோடும், ஆள் அம்புசேனையுடனும். அரியபக்தர்களுடனும் உலா வருகின்றார். அவரின் அலங்காரத்தையும். அழகுத் திருக் கோலத்தையும் கண்டு பெண்குலமே பூரித்துக் கிடக்கின்றது. பேதைப் பருவத்திலிருந்து பேரிளம்