பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

விட முடியாது என்று கர்வத்தால் இயற்கையை எதிர்த்து வாழ முற்படுகின்றனர், முயற்சிக்கின்றனர்.

சாதாரண உடல் வளம் உள்ளவன் மழை, வெயில், குளிரைக் கண்டு தடுப்புத் தேடிக் கொள்கிறான். பயிற்சியாளனே தடுப்பு இன்றி, இரவென்றும் பகலென்றும் பாராமல் திறந்த மார்போடு திரியும்போது, உடல் என்ன ஆகும்? ஆகவே, அவன் இயற்கையால் நாளாக நாளாக நலிந்து, தன்னைத்தானே நாசப்படுத்திக் கொள்கிறானே தவிர, பயிற்சி அவனைப் பாழ்படுத்துவதே இல்லை.

ஆகவே, உறுதியான மனத்தையும் உழைக்க விரும்புகின்றவர்களையுமே உடற்பயிற்சி வரவேற்கிறது.

காக்கையின் கூட்டில் முட்டையிட்டு அதன் முட்டையை உடைத்துக் குடித்துவிட்டுத் தன் இனத்தை விருத்திச் செய்து கொள்கின்ற வஞ்சகக் குயில்களைப் போல, பிறர் உழைப்பில் வாழத் துடிக்கும் சோம்பேறித் தேனிக்களைப் போல, அடுத்தவர் உடலில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சி வாழும் உண்ணிகளைப் போல, அட்டைகளைப் போல, சோம்பேறிகளாக வாழ்கின்ற மக்களால் நிச்சயம் உடற் பயிற்சியைச் செய்ய முடியாது.

பிறர் உழைப்பில் பயன் பெறும் பேடிகளால் உடற் பயிற்சியை உணரவே முடியாது. ‘பாடுபட்டால்தான் பலனுண்டு’ என்ற பழமொழி உடற்பயிற்சிக்கே பொருந்தும்.

உடற்பயிற்சியால் பெறுகின்ற சுகத்தை, வெறும் வார்த்தைகளால் எழுதிக் காட்டவோ சொல்லிக் காட்டவோ முடியாது. “தான் பெற்ற இன்பம் இன்னதென்று பிறருக்கு விரித்துரைக்க முடியாத உணர்வையே ‘அகம்’ என்று தமிழிலக்கியம் கூறும். அந்த விளக்கமே, அந்த அற்புத சுகத்தின் விளக்கமே உடல் பயிற்சிக்கும் பொருந்தும்.