பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

 வரை இலக்குக் காவலனுக்கு எல்லா விதப் பாதுகாப்பும், விதிகளின் துணையும் எப்பொழுதும் உண்டு,

14. குறியுதை(Goal Kick) தாக்கும் குழுவினர் உதைத்தாடிய பந்தானது, இலக்கிற்குள் செல்லாமல், முழுதும் உருண்டு, கடைக்கோட்டிற்கு வெளியே சென்று விட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர், பந்தை இலக்குப் பரப்பில் வைத்து உதைத்து ஆடுகளத்திற்குள்ளே அனுப்பும் நிலையைத்தான் குறியுதை என்கிறோம் .

கடைக்கோட்டில் எந்தப் பக்கமாகப் பந்து வெளியே சென்றதோ, அந்தப் பக்கமாக, இலக்குப் பரப்பின் கோட்டில் அல்லது பரப்பில் வைத்து உதைக்க வேண்டிய உதையாகும்.

குறியுதையால் நேரே இலக்கிற்குள் பந்தை செலுத்தி வெற்றி எண் (Goal) பெற முடியாது.

15. கடைக் கோடுகள் (Goal Lines) ஆடுகளத்தின் கடைசி எல்லையைக் குறிக்கின்ற கோடுகள். இந்தக் கோடுகளின் மையத்தில் தான் இலக்குகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

ஆடுகள எல்லையைக் குறிக்கப் பயன்படுவதுடன், மற்றொரு முக்கியமான பணிக்கும் இக்கோடுகள் உதவுகின்றன.

இந்தக் கடைக் கோடுகளைக் கடந்து பந்து வெளியே செல்ல தாக்கும் குழுவினர்கள் காரணமாக இருந்தால் தடுக்கும் குழுவினர் குறியுதை பெற்று ஆட்டத்தைத் தொடங்கு வார்கள்.