பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
69

42.ஆள் மாற்றுமுறை (Substitutions)

ஓய்வு நேரத்தில் ஆட்டக்காரர்களை மாற்றிக்கொள்ள நடுவரிடம் முன் அனுமதி பெறவேண்டும். அந்த அனுமதியை குழுத் தலைவன் அல்லது மேலாளர் கேட்டுப் பெறலாம். ஆள் மாற்றுதற்குரிய ஓய்வு நேரம் 30 நொடிகள். அதற்குள்ளாக, ஒரு ஆட்டக்காரரையோ அல்லது பல ஆட்டக்காரர்களையோ ஒரே சமயத்தில் மாற்றிக் கொள்ள அனுமதி உண்டு.

ஒரு முறை ஆட்டத்தில் (Set) ஒரு குழு அதிக அளவு 6 முறைதான் மாற்றாட்டக்காரர்களை மாற்றிக் கொள்ளமுடியும்.

மாற்றாட்டக்காரர், ஒருவர் உள்ளே போய் ஆட வாய்ப்பளித்து வெளியே வரும் ஒரு ஆட்டக்காரர், யாருக்கு இடம் கொடுத்து வெளியே சென்றாரோ, அதே இடத்தில் போய். நின்று ஆட முடியும். ஒரு மாற்றாட்டக்காரர் ஒரே ஒரு முறை தான் உள்ளே சென்று வெளியே வரலாம்.

ஒரு மாற்றாட்டக்காரர், ஆடுகளத்தில் இறங்கி ஆடி பின்னர் வெளியே வந்து விட்டால், மீண்டும் உள்ளே சென்று ஆட முடியவே முடியாது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், மாற்றாட்டக்காரர்களைப் போடுகின்ற வாய்ப்புகள் எல்லாம் முடிந்திருந்தால், காயம்பட்ட ஆட்டக்காரருக்குப் பதிலாக, ஒருவர் இறங்கி விளையாட அனுமதிக்கப்படும்.

43.மூன்று பந்து ஆட்டமுறை(Three Ball System)

ஆட்ட நேரத்தில் பந்து வெளியே போய்விட்டால், மீண்டும் அதை எடுத்து வருவதற்குள் நேரம் கடந்து போய் விடுகிறது என்பதாலும், ஆட்டத்தை இடை விடாமல் தொடர்ந்து நடத்தி முடிக்க வேண்டும் என்பதாலும், ஆட்ட வல்லுநர்கள் மேற்கொண்ட புது உத்திதான் இந்த மூன்று பந்து ஆட்ட முறையாகும்.