பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குப்பை கூளங்களைப் போடும் இடம் என்றும் இதற்குப் பொருள் கூறுகிறது ஆங்கில அகராதி ஒன்று.

நான்காவதாக, பார வண்டியை அல்லது ஏதோ ஒரு பொருளை இழுக்கப் பயன்படுகின்ற மிருகங்களை அல்லது குதிரை போன்ற மிருகங்களை ஒரே வரிசையாக நிறுத்தி வைக்கக் கட்ட உதவும் கயிறு என்றும் பொருள் கூறப்படுகின்றது.

இனி, இந்த Team என்ற சொல்லுக்கு உண்டான பொருளை தொகுத்துப் பார்ப்போமானால், ஒர் உண்மை நமக்குத் தெற்றென விளங்குகின்றது.

ஒழுங்காக ஒரிடத்தில் வைக்க வேண்டும். அது ஓரினத்தின் ஒரே தொகுதியாக இருக்கவேண்டும். தூக்கிச் செல்லப்படுகின்ற படுக்கை போன்று இருக்க வேண்டும். இழுக்க உதவும் மிருகங்களை ஒரிடத்தில் வரிசையாக நிறுத்தி இருக்க வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு புழக்கத்திலும் பழக்கத்திலும் பயன்பட்டு வந்தச் சொல்லானது. மிருகங்களிடமிருந்து மாறி, தனிப்பட்ட ஆட்களைக் குறிப்பிட்டுச் சொல்லுமாறு பயன்படுத்தும் நிலைக்கு வந்தது.

அந்த Tem என்று சொல்லானது Team என்று வளர்ந்து மாற்றம் பெற்றுக் கொண்டது. அவ்வாறு மாறியது குதிரைகள் அணி அல்லது கூடைப் பந்தாட்டக் குழு என்று கூறுமளவுக்கு உருமாறிக் கொண்டது.

இதைப் பார்க்கும்பொழுது குழு என்பதற்கு Team என்று கூறுவதில் தவறில்லை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.