பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்பதையும், அந்த அர்த்தம் இந்த காலத்திற்கு எப்படி பொருந்தி வந்திருக்கிறது என்பதையும் மிகவும் அரிதின் முயன்று இந்நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

எந்த அளவுக்கு இதில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்ற வினாவுக்கு விடையாக உங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

இப்படி சொல்லையும் அதற்குரிய பொருளையும் தேடுகின்ற முயற்சியும் ஆராய்ச்சியும் தேவைதானா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் இருப்பார்கள்.

காவிரி எங்கே தோன்றியது, கங்கை எங்கே தொடங்கியது, கருவின் மூலம் என்ன என்றெல்லாம் கேள்வி கேட்டு கிளர்ந்தெழுந்து விடை காண முயல்கின்றவர்களை பாராட்டி ஏற்றுக்கொள்கின்ற நெஞ்சங்கள், விளையாட்டுத் துறை என்றதும் இப்படி வினா விடுப்பதும் சகஜமே!

ஆனால், அற்புதமான பொருள் பொதிந்த விளையாட்டுச் சொற்கள் எல்லாம் வாழ்க்கை நடை முறையை ஒட்டியே, காரணப் பெயர்களாகவே அமைந்திருக்கும் பாங்கினை அறியும் பொழுது, உங்கள் மனமும் மகிழும். விளையாட்டுத் துறை சொற்களின் நிலையும் கலையும் புரியும்.

அத்தகைய அரிய சொற்களை, அன்றாடம் நம்மிடையே உரையாடலில் நடம் பயிலும் சொற்களை உங்கள் இடம் தந்திருக்கிறேன். சொல்லிப் பாருங்கள். என்ன பொருள் இருந்திருக்கும், எப்படி வளர்ந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். பின்னர் படியுங்கள்.

'நிச்சயம் சுவையாக இருக்கும், நிம்மதியாக பொழுது போகவும் வைக்கும், நல்ல கருத்துக்களை நயம்பட அறிகின்ற பொழுது பேரின்பம் பிறக்கும்' என்ற நம்பிக்கையில் உங்கள் கையில் படைக்கிறேன்.

எனது நூல்களையும் ஏற்று ஆதரிக்கும் அறிஞருலகம் இந்நூலையும் ஏற்று, பாராட்டும், பயன்பெறும் என்று நம்புகிறேன்.

அன்பன்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா