பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Strategy என்ற சொல்லும் இந்த அர்த்தத்தில்தான் விளையாட்டுத்துறையில் பொருள் தருகிறது. பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

ஒரு குழுவின் Strategy என்பதை, அக்குழுவின் நடைமுறைத்திறம், திறமுறை என்ன வென்பதை குறிப்பதற்காகவே கூறப்படும் ஒரு கருத்துமாகும்.

Strategy எனும் ஆங்கிலச் சொல்லானது Strategos எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். இந்த கிரேக்க மூலச் சொல்லுக்கு General அதாவது படைத் தலைவர் அல்லது படைத்தளபதி என்றும் பொருள் கூறலாம்.

கிரேக்க நாட்டில் சிறு சிறு நாடுகளுக்கிடையே அடிக்கடி ஒன்றுக்கொன்று தீராப் பகைமையாலும் பொறாமையாலும் போட்டியிட்டு, போரிட்டுக் கொண்டு வாழ்ந்த சமயத்தில், பொதுமக்கள் அனைவரும் போர் வீரர்களாக இருந்து, தாய் நாடு காக்க வேண்டும் என்ற விதி கட்டாயமானதாக இருந்தது.

அத்துடன், பொதுமக்களும் தங்கள் தேகத்தை பயிற்சியின் மூலமாக பலப்படுத்திக் கொண்டிருப்பதுடன் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவும் வேண்டும் என்ற கட்டாய நிலைமையும் தொடர்ந்து அவர்களிடையே இருந்ததுண்டு.

இந்த இராணுவ வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டுதான் இந்த கிரேக்கச் சொல்லும் தோற்றம் பெற்றிருக்கிறது.

Strategos என்ற சொல் படைத்தலைவர் என்று அர்த்தம் தருகிறது என்று முன்னர் விளக்கியிருந்தோம்.