பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

76


இந்த கிரேக்கச் சொல்லையே இரண்டாகப் பிரித்துப் பார்த்தால், அதன் அர்த்தம் இன்னும் தெளிவாக விளக்கம் தருகிறது.

Stratos என்றும் Agein என்றும் இந்த சொல்லை இரண்டாகப் பிரித்துப் பொருள் கூறுகின்றார்கள். Stratos என்றால் படை அல்லது சேனை (Army) என்றும், Agein என்றால், நடத்துதல் அல்லது செலுத்துதல் என்றும் பொருள் தருகின்றது.

அப்படிப் பார்த்தால், சேனையை நடத்துதல் என்ற பொருளில் வருகின்ற சொல்லானது, சேனையைத் திட்டமிட்டுத் தீர்மானித்து, திறம்பட நடத்தி வெற்றி பெற வைக்கச் செய்கின்ற திறமிக்கத் தலைவனின் திட்டமுறையை குறித்துக் காட்டுகின்றது.

தனது படையை வெற்றிப் பாதையில் முன்னேற்றி நடத்திச் செல்லும் திறத்தை Strategy என்பதாக நாம் கூறுகிறோம். ஒட்டப்பந்தயங்களிலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளிலும் என ஒவ்வொன்றினை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அவையெல்லாம் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளே சிறிது வன்மை நீங்கி மென்மையாக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன என்று நாம் அறிகிறோம்.

உதாரணத்திற்கு, எதிரிகள்மேல் ஈட்டி எறிதல், தேரோட்டிச் செல்லல், அம்பு விடுதல், கல்லெறிதல் மல் யுத்தம், குத்துச்சண்டை போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் போரிடும் தன்மையை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளாகும்.