பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒவ்வொரு காரியத்தைக் குறிக்கின்ற சிறந்த காரணப் பெயர்களாகவே இருக்கின்றன. ஆகவே, பொருள் பொதிந்து புகழ் படைத்த அச்சொற்கள், உருவம் பெற்ற நிலையை நாம் விளக்கமாகத் தெரிந்து கொண்டால், விளையாட்டை அனுபவிப்பதற்கும் ஆனந்தமுடன் ஆடி மகிழ்வதற்கும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அடிக்கடி பயன்படும் சொற்கள் பிறந்தவிதம் பற்றி இனி அறிந்து கொள்வோம்.

1. ATHLETE

அத்லெட் என்ற சொல் அத்லாஸ் (Athlos) என்ற வார்த்தையிலிருந்து பிறந்திருக்கிறது. இது ஒரு கிரேக்கச் சொல்லாகும், அத்லாஸ் என்ற வார்த்தைக்குப் போட்டி (Contest) என்பது பொருளாகும். அதே தொடர்புடைய மற்றொரு சொல்லும் இருக்கிறது. அதனை அத்லான் (Athlon) என்றார்கள். அதற்குப் பரிசு (Prize) என்று பொருளாகும்.

அதாவது, கிரேக்க நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் பரிசினைப் பெறுவதற்காகப் போட்டியில் கலந்து கொண்டதொரு ஆற்றல் மிகு வீரனையே அவர்கள் அத்லெட் என்று அழைத்தார்கள். கிரேக்கர்கள் காலத்திலும், அவர்களைத் தொடர்ந்து ரோமானியர்கள் காலத்திலும் இதே அர்த்தத்தில்தான் விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டனர், போட்டியில் பரிசு பெறும் நோக்கத்துடன் கலந்து கொண்ட வீரனையே அத்லெட் என்று அழைத்தனர்.