பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 129

என்ன இருந்தாலும், என் எழுத்துப் பணிக்கு இன்னல் ஏற்பட்டு விடாமல் துரத்திக் கொண்டு நின்றது. நான் குற்றம் செய்வது போன்ற உணர்வை ஊட்டி, இலட்சியமானது குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது. என்ன ஆனாலும் சரி என்று நான் தீவிரமாக எழுத்துப் பணியில் ஆர்வம் காட்டினேன். என்னிடம் ஒரு பழக்கமுண்டு. விந்தையானது தான்.

எந்த காரியத்தை நான் செய்ய மேற் கொண்டாலும், அவற்றில் ஆழ்ந்து போய் விடுவேன். இது எல்லோரும் செய்வது தான். ஆனால், எனக்கிருந்த ஒரு அதிர்ஷடம். என் முயற்சிக்குத் துணையாக, நான் போகும் இடங்களிலெல்லாம் உதவி கிடைக்கும். அது என்னை விரட்டி வேலை வாங்கிவிடும்.

அப்படி நேர்கிற நிகழ்ச்சிகள் என் வேலையை தீவிரமடையச் செய்துவிடும். இரவு பகல் பார்க்காமல், வீட்டில் இருக்கும் நேரங்களிலெல்லாம், படிப்பதும் எழுதுவதுமாகவே இருப்பேன். அதாவது வீட்டில் தங்கும் நேரம் இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை தான். பகல் நேரத்தில், பணம் சம்பாதிக்க மேற்கொள்ளும் முயற்சிகள்.

ஏறத்தாழ 5 புத்தகங்களை எழுதி தயாரித்து விட்டேன். அச்சாக வேண்டுமே. பணத்திற்கு எங்கே போவது? எதை நம்பி நீங்கள் புத்தகம் எழுதத் தொடங்கினர்கள். யார் உங்களுக்கு பணம் தருவார்கள் ? எந்த எதிர்பார்ப்பில் இப் படி எழுதி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றீர்கள் என்று என் மனைவி கேட்ட கேள்விகள் ஆயிரம். தினம் தினம் இதே கேள்விகள்தான். அத்தனைக்கும் நான் அளித்த ஒரே பதில்

கவலைப்படாதே....கடவுள் கொடுப்பார்.

இந்த நம்பிக்கை ஒன்றுதான் என்னை வாழ்வித்தது. வழி நடத்தியது என்றால். வியப்பாக இருக்கிறதல்லவா. அல்ல. இது, உண்மையிலும் உண்மை.