பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

T . சொற்களை உண்டாக்க வேண்டும் என்கிற போதுதான், நிறைய

சிந்திக்க வேண்டியதாயிற்று.

கால் பந்தாட்டம் பற்றித்தான், முதன் முதலில் எழுதத் தொடங்கினேன். கால் பந்தாட்டம் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை, பல விளையாட்டுத்துறை ஆங்கில நூல்களிலும் கலைக் களஞ்சியம் நூல்களிலும் எடுத்துக் கொண்டேன்.

விளையாட்டுத் திறன் நுணுக்கங்களை எழுதுகிற போதுதான், அதற்கான புதிய சொற்களைப் படைக்க, பெரிதும் பாடுபட்டேன். ஆங்கில கலைச்சொல்லுக்குத் தமிழில் அர்த்தம் எழுதுவது என்பது எளிதுதான். ஆனால், ஆங்கிலச் சொல்லின் அர்த்தம் மாறுபடாமல், அதே நேரத்தில் பதவுரைபோல் நீண்ட வாக்கியமாகப் போய் விடாமல், ஆங்கிலச் சொல்லுக்கு எத்தனை எழுத்துக்களோ, அது போலவே அதனை விளக்கவரும் தமிழ்ச் சொல்லுக்கும் இருக்க வேண்டும் என்று நான் முதலிலே முடிவு கட்டிக் கொண்டதால் தான், என் சிந்தனையில் சிக்கல்கள் தீராததாய் தொடர்ந்தன. தொல்லை தந்தன.

கால் பந்தாட்டத்திலே off side என்று ஒரு சொல். அதற்குரிய பொருளை எழுத முயற்சித்தால், ஒரு பக்கத்திற்குப் போகிறது. சுருக்கமாகச் சொல்ல வந்தால், ஒருவரிக்கு மேல் வருகிறது.

ஆங்கிலச் சொல்லில் உள்ள வார்த்தைகள் எண்ணிக்கை போலவே, தமிழிலும் தர வேண்டும் என்று ஒரு மாத காலம் முயற்சித்தும், கண்டுபிடிக்க முடியாமல் திகைத்தேன்.

ஒரு நாள் மாலையில், காலாற நடந்து செல்லலாம் என்று ஏரிக்கரை ஓரமாக, (காரைக்குடியில்) நடந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு பேர், வயதான மாதர்கள் பேசிக் கொண்டு சென்றனர்.