பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

உணவியல்; பாதுகாப்பு இயல்; மருத்துவ இயல் போன்ற வாழ்க்கைக்குப் பயன்படுகிற அத்தனை அறிவியல்களிலும் அடங்கியுள்ள ஆற்றல் மிகு கருத்துக்களையும், செயல் பாடுகளையும் சேர்த்துக் கொண்டுதான், விளையாட்டுக்கள் தோன்றியிருக்கின்றன, வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித குலத்திற்கு ஆற்றுகிற மாபெரும் தொண்டாக விளையாட்டுக்கள் பணி செய்து வருகின்றன. பயன் பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலக்கியம் என்ற சொல்லை நாம் இலக்கு+இயம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். இலக்கு என்றால் விளக்கம் என்றும் வாழ்க்கை சொல்லும் குறி என்றும் கூறலாம். எண்ணம் என்றும், இலட்சியம் என்றும் மேலும் பல பொருள்களைக்

கூறலாம்.

இயம் என்றால், சொல் என்றும், ஒலி என்றும், இயம்பு என்றும், வாத்தியம் என்றும் பொருள் கூறலாம். இந்த நான்கு பொருள்களிலும் உள்ள நயங்களை இப்பொழுது சேர்த்துப் பார்ப்போம்.

வாழ்க்கைக்கு விளையாட்டானது, வேண்டிய இலட்சியத்தைச் சொல்கிறது. வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளை விளம்புகிறது. வாழ்வில் கிட்டும் பயன்கள் என்ன என்பதை ஒலித்துக் காட்டுகிறது. இதனையெல்லாம், ஒரு வித இசை லயத்தோடு, இசைத்துக் காட்டுகின்ற இசைக் கருவியாகவே இலக்கியம், நயத்தோடு இருக்கிறது.

ஆகவே, இலக்கியம் என்பது, வாழ்க்கையை நெறிப்படுத்த வரைமுறைப்படுத்த; மகிழ்ச்சியில் ஆழ்த்த; மனித நேயத்தைக் கற்பிக்க; மாண்புகளை வளர்த்து விட உதவுவதற்காகவே, உருவாகி வந்திருக்கிறது.