பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

விளையாட்டு உலகம்

வசதியான நிலையிலும் இல்லை. அன்றாடம் உழைத்தால் தான் அரை வயிறு நிரம்பும் என்ற பொருளாதார நிலை. என்றாலும், ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்ளும் உறுதியில் உறுதியாகவே அஞ்சல்காரனின் நாட்கள் ஆரவாரமாகத் தொடர்ந்தன.

கியூபா நாட்டில் ஹவாரா என்ற இடத்தில் வாழ்ந்த இந்த அஞ்சல்காரனின்பெயர் பெலிக்ஸ்கர்வஜால் என்பதாகும்.இப்படியே பணியாற்றிக் கொண்டிருந்தால் தன் முயற்சி பலிக்காது என்று புரிந்து கொண்டான் பெலிக்ஸ். அதனால், முதல் வேலையாகத் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டான். மிகவும் தைரியமானவன் தான்.

வேலையிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. அதனால் வருமானம் மிகுதியாகுமா! 1904ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயம் செயின்ட் லூயிஸ் என்ற இடத்தில் நடக்க இருந்தது என்று அறிந்தவுடன் அங்கு போக வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அங்குப் போக வேண்டும் என்றால் பயணத்திற்குப் பணம் வேண்டுமே! துணிவு கொண்ட நெஞ்சம் துரிதமாக சிந்திக்கத் தொடங்கியது.

ஒரு நாள்-ஹவாராவிலுள்ள ஒரு புல்வெளி நிறைந்த மைதானத்தைச் சுற்றிச் சுற்றி பெலிக்ஸ் ஓடத் தொடங்கிவிட்டான். நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்ததைக் கண்டு, சிலர் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அதுவே பெருங் கூட்டமாகக் கூடத் தொடங்கிவிட்டது. கூட்டத்தின் முன்னே தன் கொள்கையான ஒலிம்பிக் பந்தயம் போவதைக் கூறி உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டான்.