பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

27


அடுத்த ஆளாக ஓடிவந்து ஒட்டத்தை முடித்து விடுகிறான். அமெரிக்க அதிகாரிகள் முறையிடுகின்றனர். முடிவு! ஓட்டத்தில் உதவிபெற்றதற்காக, டோரண்டோ போட்டியிலிருந்து நீக்கப்படுகிறான். வெற்றி வீரனாக அமெரிக்கன் ஜான்ஹேய்ஸ் அறிவிக்கப்படுகிறான். டோரண்டோ தோல்வியைக் கண்டு தொய்ந்து போனான். அதுமட்டுமல்ல. பார்வையாளர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி.

தங்கப்பதக்கம் அவனுக்கு இல்லையே என்பதைத் தாங்க முடியாத நெஞ்சினர்களாகத் தவித்து கொண்டிருந்தார்கள் மக்கள். பரிசு வழங்கும் கட்டம் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து இராணி அலெக்சாண்டரியா பரிசு வழங்குகிறபொழுது, அறிவிப்பு ஒன்று வருகிறது. மிகச்சிறப்பாக ஓடிய டோரண்டோவுக்கு இராணியார் தங்கக் கோப்பை ஒன்றை சிறப்புப் பரிசாக அளிக்கின்றார்கள் என்பதுதான்.

தங்கப்பதக்கம் இல்லைதான். வெற்றிவீரன் எனும் பட்டம் இல்லைதான். ஆனால் தங்கக் கோப்பையையும், மக்கள் இதயங்களிலே தங்கும் வாய்ப்பையும், பெரும் புகழையும் பெற்றுவிட்ட இத்தாலிய நாட்டு இனிப்புத் தயாரிப்பாளன் டோரண்டோ பியட்ரி,பெற்றதோ அளவிலா ஆனந்தம்,பேரானந்தம்.

நாம் பெற்றதோ இதயத்தை மயக்கிய இனிப்புச் செய்தி.

அதற்கு ஈடு இணையும் இவ்வுலகில்தான் உண்டோ!