பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

விளையாட்டு உலகம்

நினைவே இல்லாமல், இதுவே உற்ற துணை என்று. ஏற்றுக்கொண்டு செய்தான். அவன்நம்பிக்கை பொய்க்கவில்லை. உழைப்பு வீண் போகவில்லை. உற்றதுணை என்ற நற்றுணையான உடற்பயிற்சியும் அவனைக்கைவிட்டு விடவில்லை.

பயன்தரத் தொடங்கியது பயிற்சி. வாடி வதங்கிய கால்கள் வாட்டம் நீங்கின. வலிமை பெற்றன. எழுந்து நிற்கத் தொடங்கினான் சிறுவன். ஓடத் தொடங்கினான். அவன் கால்களுக்கு உடற்பயிற்சி அபார சக்தியை அளித்து விட்டது. நிற்க முடியுமா என்ற நினைவிலே நிறுத்திக் கிடந்த அவனது கால்களுக்கு, அசுர சக்தி தான் வந்து விட்டதோ என்னவோ, அவனது சாதனைகள் அப்படித்தான் வெளிவந்து கொண்டிருந்தன.

‘விளையாட்டு என்பது உடல் வலிமையின் வெளிப்பாடு’ தானே! வலிமை பெற்ற அந்த வாலிபனும் விளையாட்டுக்களில் ஈடுபட்டான். 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டுமல்ல, 1904ம் ஆண்டும், 1908ம் ஆண்டும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நின்று கொண்டே உயரத்தாண்டல் (Standing High Jump) நின்று கொண்டே நீளத்தாண்டல், நின்று கொண்டே மும்முறைத் தாண்டல் (Hop Step & Jump) எனும் மூன்று நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கங்களே பெற்றான்.

நின்று கொண்டே உயரத் தாண்டும் போட்டியில் 5 அடி 5 அங்குலம் உயரத்தைத் தாண்டி, உலக சாதனையையே நிகழ்த்தினான். ஒலிம்பிக் வரலாற்றிலேயே இதுவரை 10 தங்கப் பதக்கங்களை யாரும் வெல்லவில்லை. இவனே வென்றான். அவனை எல்லோரும் மனிதத் தவளை(Human Erog) என்றே செல்லப் பெயரிட்டு