பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

விளையாட்டு உலகம்

பயிற்சி செய்யும்போது 73 மீட்டர் துாரம் எறிந்து காட்டியதைக்கண்ட விளையாட்டுத் துறை வல்லுநர்கள், இந்த அதிசய வீராங்கனையால் மேலும் அற்புத சாதனைகளை நிறுவமுடியும் என்றே நம்புகின்றார்கள்.

1980ஆம் ஆண்டிலே மாஸ்கோவிலே நடக்கும் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறேன் என்கிறார், அந்த நாளிலே 35 வயதாக இருக்கப்போகும் மெல்னிக் ‘வயது என்னை ஒன்றும் செய்து விடாது’ என்று ஆர்வத்துடன் பேசுகின்றாள்.

உலக அரங்கிலே பெண்களுக்கான தட்டெறியும் நிகழ்ச்சி எனறால், ஃபெய்னா மெல்னிக்கின் நினைவு வராதவர்களே இல்லை எனலாம். குறைந்த காலத்லேயே, பேரளவில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய பெண்மணியைக் கேட்கிறவர்களுக்கு, ‘உழைப்பே உயர்வின் ரகசியம்’ என்று கூறுகிறாள். அந்த ரகசியமானது' உழைத்தேன்! உயர்ந்தேன்! என்பது தானே!

‘எந்தப் பணியிலும் இதயம் விரும்பி ஈடுபட்டால், இனிய தியாகங்களைச் செய்துவிட்டால் எண்ணியது கைகூடும்’ என்ற பொன்மொழிக்கு உண்மையான சான்றாகத் திகழும் பெய்னா மெல்னிக்கின் உழைப்பையும் முனைப்பையும் நம் நாட்டு இளைஞர்களும் சிறுமிகளும் ஏற்றுகொண்டால், தமிழகம் தரணியில் தலை சிறந்த நாடாக திகழும் என்பது சொல்லாமலே விளங்கும், சுகம்தரும் மொழியாகும்.