பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

விளையாட்டு உலகம்

ஓடுவது பொழுதுபோக்குக்காக என்பதுகூட அல்ல! அவர் ஓட இருப்பது தனது பிறந்த நாளுக்காக! ஆர்சரியமாக இல்லையா!

பிறந்தநாள் என்றால் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை சூடி, அறுசுவை விருந்து உண்டு, ஆனந்தமாகக் கொண்டாடி சுற்றத்தோடும் நண்பர்களோடும் பேசி மகிழ்ந்து, அந்த நாளை சினிமா, டிராமா, பீச், சுற்றுலா என்று கழிக்கின்ற நம்மவர்க்கு, பிறந்த நாள் அன்று ஒருவர் ஓடுகின்றார் என்றால் ஆச்சரியமாகக் தெரியவில்லை. பைத்தியக்காரத்தனமாக அல்லவோ நமக்குத் தோன்றுகிறது!

ஜாய்ராய் (Joie Ray) என்ற அந்த 68வயது இளைஞர், ஒரு மைல் துார ஓட்டத்தைத் தனது பிறந்த நாளன்று ஓடிக் காட்டுகிறார். தனது 20வது வயதில் ஒரு மைல் ஓட்டத்தைத் 4 நிமிடம் 12 வினாடிகளில் ஓடி முடித்து உலக சாதனையை நிகழ்த்திய வீரர் அவர். அதாவது, 4 நிமிடம் 20 வினாடிகளுக்குள் ஒரு மைல் ஓட்டத்தை முதன் முதலாக ஓடி முடித்த வீரர். அந்த சாதனையையும் 46 தடவைகளுக்குமேல் செய்துகாட்டியவர். மாபெரும் வீரர். 15 ஆண்டுகள் தொடர்ந்து ஓட்டப் பந்தயத்தில் வெற்றி கண்டவர். வெகுமதி பெற்றவர்.

தனது பிறந்த நாள் வரும்பொழுதெல்லாம் தனது பிறந்த நாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட, ஒரு மைல் தூரம் ஓடி, தனது தேகத்தின் வலிமையைத் தானே சோதனை செய்து பார்த்துக்கொள்வதுடன், வலிமையாக உடலை வைத்திருக்க உதவும் ஆண்டவனுக்கும் நன்றி செலுத்துவதற்காகவும் கூட அவர் செய்தார்.